கட்டி 10 ஆண்டாகியும் திறக்கப்படாமல் வீணாகும் பஸ் ஸ்டாண்ட்
செந்துறை: -செந்துறையில் ரூ.1.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட் 10 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. செந்துறையை சுற்றி பிள்ளையார்நத்தம், மணக்காட்டூர்,போடிக்கம்பட்டி, பழனிபட்டி உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களுக்கு மையப்பகுதியாக செந்துறை உள்ளது. செந்துறையில் ஊராட்சி அலுவலகம் முன் பஸ்களை நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வந்தனர். அப்பகுதியில் இட நெருக்கடி அதிகரித்ததால் 10 ஆண்டுகளுக்கு முன் செந்துறை அவுட்டர் பகுதியில் ரூ.1.50 கோடியில் 20க்கு மேற்பட்ட வணிக வளாகங்கள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் இன்னும் பயன்பாட்டிற்கு வராததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.வணிக வளாகங்களின் ஜன்னல், கண்ணாடிகளை உடைத்தும், மின்சாரசாதனங்களை சேதப்படுத்தியும் வருகின்றனர். கட்டடம் பயன்படுத்தாமல் 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் சேதமடைந்து வருகிறது. அரசு பணம் வீணாவதை தடுக்க பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். சேத மா கும் கட்டடம் அ.கோபாலகிருஷ்ணன், சமூக ஆர்வலர், செந்துறை: மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட், 20க்கு மேற்பட்ட வணிகவளாக கட்டடங்கள் மக்களுக்கு பயன்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் வணிக வளாக கட்டடங்கள், பஸ் ஸ்டாண்ட் சேதமடைந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பஸ் ஸ்டாண்டை பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பயணிகள் அவதி யோசுவா, சமூக ஆர்வலர், செந்துறை-நல்ல பிச்சம்பட்டி: அரசியல் உள் நோக்கத்திற்காக இன்னும் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படாமல் உள்ளது. பஸ்ஸ்டாண்ட் இல்லாததால் பஸ்களை கண்ட இடத்தில் நிறுத்துவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி உள்ளனர். பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் விளைபொருட்களை சந்தைக்கு அனுப்ப முடிய வில்லை. பஸ் ஸ்டாண்டை எப்போது திறப்பார்கள் என காத்திருக்கிறோம்.