உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரங்களை உருவாக்கும் விழுதுகள் அமைப்பு

மரங்களை உருவாக்கும் விழுதுகள் அமைப்பு

குடும்ப விழாக்களில் வரும் உறவினர்கள் நண்பர்களுக்கு விதைப்பந்துகளை கொடுத்து மரம் நடுவதை விழுதுகள் அமைப்பு ஊக்குவித்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.பசுமையான சூழல் நிறைந்த ஒட்டன்சத்திரத்தை உருவாக்கும் வகையில் விழுதுகள் என்ற தன்னார்வ அமைப்பு 2018 ம் ஆண்டு முதல் மரக்கன்றுகள் நடுதல், நர்சரிகளை உருவாக்குதல், விதைப்பந்துகள் உற்பத்தி மற்றும் தூவுதல், நீர்நிலைகளை தூர்வாரி கரை ஓரங்களை சுற்றி பன விதை மற்றும் மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை வேலப்பர் மலைப்பகுதியில் இதைப் பந்துகளை தூவினர். மேலும் மரக்கன்றுகள் நடவு செய்து அப்போது மலையை சுற்றி அளவீடுகள் செய்து கிரிவலப்பாதை அமைக்கும் பணியை துவங்கினர். தற்போது அமைச்சர் சக்கரபாணி முயற்சியால் ரூ.15 கோடி செலவில் நவீன வசதி கொண்ட கிரிவலம் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த அமைப்பின் நிர்வாகிகள் பொது இடங்களில் மட்டுமின்றி தங்களது இல்ல விழாக்களில் விதைப் பந்துகளை விருந்தினர்களுக்கு பரிசாக வழங்கி பசுமையான சூழலை உருவாக்க முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பயிற்சிகள் கொடுத்து ஊதியம் அளித்து அவர்களின் வாழ்க்கை மேம்பட விதை தயாரிப்பு பணிகளை செய்து வருகிறது.சில நாட்களுக்கு முன்பு விழுதுகள் அமைப்பின் பொருளாளர் குழந்தைவேல் இல்ல திருமண விழாவில் அரசு, ஆலம், வேம்பு, சரக்கொன்றை, புங்கன், புளி உள்ளிட்ட மர வகைகள் கலந்த 40 ஆயிரம் விதைப்பந்துகள் அடங்கிய பரிசு பெட்டகத்தை வழங்கினர். மரக்கன்றுகள் நடவு , நீர் நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட சேவைகளுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் இரண்டு முறை இந்த அமைப்பு விருதுகளை பெற்றுள்ளது.

மரம் வளர்ப்பு ஊக்குவிக்கிறோம்

குப்புசாமி, ஒருங்கிணைப்பாளர், விழுதுகள் அமைப்பு: மரக்கன்றுகள் நடவு செய்ய இயலாத பகுதிகளில் விதைப்பந்துகளை தூவினால் மழைக் காலங்களில் முளைத்து வளரும் தன்மை கொண்டது. மண், இயற்கை உரம் மற்றும் விதைகள் கலந்த உருண்டையாக தயார் செய்கிறோம். இவ்வாறு தயாரிக்கப்படும் விதைப்பந்துகள் ஓராண்டு காலத்திற்கு கெடாமல் இருக்கும். மலை, ரோட்டோரங்கள், குளக்கரை கோவில் வளாகம், வனப்பகுதி போன்ற இடங்களில் விதைப்பந்துகளை நாங்கள் தூவி வருகிறோம். ஒவ்வொருவரும் தங்கள் இல்லங்களில் நடக்கும் விழாக்களில் மரக்கன்று, விதை பந்துகள் வழங்கல் போன்ற சமூக நலன் சார்ந்த பரிசுகளை வழங்கி இயற்கையான சூழல், மரம் வளர்ப்பை மேம்படுத்தி அனைவரும் பங்காற்ற வேண்டும். தேவையான ஆலோசனை மற்றும் விதைப்பந்துகளை வழங்க தயாராக உள்ளோம்.

இல்ல விழாக்களில் விதை பந்துகள்

குழந்தைவேல், பொருளாளர், விழுதுகள் அமைப்பு : சமீபத்தில் நடந்த எங்களது இல்ல திருமண விழாவில் பங்கேற்பவர்கள் சிரமம் இன்றி மரக்கன்றுகளை நடுவதற்கு என்ன செய்யலாம் என குடும்பத்தினர், நிர்வாகிகளுடன் யோசித்தோம். இதன் பயனாக விழாவிற்கு வரும் விருந்தினர்களுக்கு விதை பந்துகள் அடங்கிய பெட்டகத்தை கொடுத்து போகும் வழியில் தூவச் செய்தால் மழை பெய்யும் போது அவை முளைத்து மரங்களாக வளர ஏதுவாக இருக்கும் என முடிவு செய்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதைப் பந்துகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினோம். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் வனத்துறை, ஊரக உள்ளாட்சித் துறை, வருவாய் துறை மற்றும் போலீசாருடன் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி