உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஹாக்கி போட்டியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மோதல் மாணவி உட்பட மூவர் காயம்; பெற்றோர் மறியல்

ஹாக்கி போட்டியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மோதல் மாணவி உட்பட மூவர் காயம்; பெற்றோர் மறியல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கல்லுாரி மைதானத்தில் நடந்த மண்டல ஹாக்கி போட்டியில், கல்லுாரி, பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவி உட்பட 3 பேர் காயமடைந்தனர். ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் 14 வயது உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட குருவட்ட ஹாக்கி போட்டி பழைய கரூர் சாலையில் உள்ள கல்லுாரி மைதானத்தில் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 12 பள்ளிகள் கலந்துகொண்டன. முத்தழகுப்பட்டி பிரான்சிஸ் சேவியர் மேல்நிலை பள்ளி , மரியன்னை மேல்நிலை பள்ளி இடையே நடந்த போட்டி இடையே பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்களாக வந்திருந்த கல்லுாரி மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பிரான்சிஸ் சேவியர் பள்ளி மாணவி இனியா ஸ்ரீ 12, மாணவர்கள் சந்தோஷ் 15, பூபதி 15, காயமடைந்தனர். இதையடுத்து ஹாக்கி போட்டிகள் நிறுத்தப்பட்டன.இதன் மோதல் வீடியோ வாட்ஸ் ஆப்களில் வைரலாகியது. இதில் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பதிவாகி உள்ளது. எஸ்.பி., அலுவலகத்தில் புகார் இதனிடையே எஸ்.பி., அலுவலகத்துக்கு புகார் அளிக்க வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்தனர். இதை தொடர்ந்து பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைபள்ளி தாளாளர் சகாயம்மேரி , காயம்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் தனித்தனியாக புகார் அளித்தனர். மாணவர்கள் கூறியதாவது: போட்டி துவங்கியது முதல் மரியன்னை மேல்நிலைப்பள்ளி ஆதரவாக நடுவர்கள் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டனர். எங்கள் பள்ளியின் சார்பில் களத்திலிருந்த கோல் கீப்பரான மாணவர் தேவா மீது கல்லுாரி தன்னார்வலர் மாணவர்கள் கல்லை துாக்கி எறிந்தனர். கல்லுாரி ஹாக்கி பயிற்சியாளர் எங்களை ஆபாச வார்த்தைகளால் திட்டினார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கல்லுாரி மாணவர்கள் பள்ளி எங்களை ஹாக்கி மட்டை கொண்டு தாக்கினர் என்றனர். பெற்றோர் மறியல் ஹாக்கி போட்டியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக காயமடைந்து சிகிச்சையில் உள்ள மாணவர்களுக்கு நீதி வழங்கக்கேட்டும், புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரியும் பிரான்சிஸ் சேவியர் பள்ளி மாணவர்களின் பெற்றோர் திண்டுக்கல் - பழநி சாலை முத்தழகுப்பட்டியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தவறான தகவல் கல்லுாரி தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், 'பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை சமாதானப்படுத்துவதற்காக சென்ற கல்லுாரி தன்னார்வலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் வரவும் அனைத்து பள்ளி மாணவர்களையும் வெளியேற்றிவிட்டோம். கல்லுாரி மைதானத்தில் நடந்த சம்பவத்துக்கும், கல்லுாரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கல்லுாரிக்கு அவபெயர் ஏற்படுத்தும் நோக்கில் தவறான செய்தி பரப்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி