| ADDED : நவ 28, 2025 08:00 AM
வேடசந்துார்: குடகனாறு வல்லுனர் குழு அறிக்கையை வெளியிடாத தமிழக அரசை கண்டித்து, வேடசந்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள், ஒரு மாத காலக்கெடுவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், ஒட்டு மொத்தமாக சென்று தடுப்புச் சுவரை தகர்ப்போம் என உறுதிமொழி எடுத்தனர். திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் குடகனாறு, ஆத்தூர், தாடிக்கொம்பு வேடசந்தூர், அழகாபுரி, கூம்பூர் வழியாக கரூர் காவிரி ஆற்றில் கலக்கிறது.வேடசந்தூர் அழகாபுரி அருகே 27 அடி கொள்ளளவு கொண்ட குடகனாறு அணை உள்ளது. 110 கி.மீ., பயணிக்கும் இந்த குடகனாற்று தண்ணீரை நம்பித்தான் வழியிடை கிராம மக்கள், விவசாயிகள் பயன் பெற்று வந்தனர். இந்நிலையில் ஆத்தூர் காமராஜர் அணைக்கும் மேலே இருந்த சிறிய தடுப்பணையில், 10 உயரமும், 150 அடி நீளமும் கொண்ட தடுப்பு சுவரை எழுப்பி, தண்ணீரை தெற்கு திசை நோக்கி திருப்பி விட்டனர் என்ற புகார் தொடர்ந்து எழுந்து வருகிறது. இதனால் வழக்கம்போல், குடகனாற்றில் தண்ணீர் வராததால், ஆங்காங்கே தொடர் பிரச்சினைகள் எழுந்தன. இதை தொடர்ந்து தான் தமிழக அரசு வல்லுநர் குழு ஒன்றை அமைத்தது. குழு அமைத்து 5 வருடங்கள் ஓடிய நிலையில், குழு அறிக்கை வெளியாகவில்லை. இந்நிலையில் தான் குடகனாறு பாதுகாப்பு சங்கம் சார்பில், வல்லுனர் குழு அறிக்கையை வெளியிடக் கோரி தொடர் போராட்டங்கள் நடக்கின்றன. அதன்படி, வேடசந்தூர் ஆத்து மேடு முதல், நரசிங்கபுரம் தடுப்புச் சுவர் வரை, டூவீலர் பேரணி நடைபெறும் என அறிவித்தனர். போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் அறிக்கையை வெளியிடாத அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமாக நடந்தது. முடிவாக, ஒரு மாத காலக்கெடுவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், ஒட்டு மொத்தமாக சென்று தடுப்புச் சுவரை தகர்ப்போம் என உறுதிமொழி எடுத்தனர்.குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.