ஊராட்சிகளில் ரூ. பல லட்சம் மின் கட்டணம் பாக்கி ஏன் இந்த நிலை; நிதியின்மையால் வளர்ச்சிப்பணிகளில் பெரும் பாதிப்பு
குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டத்தில் 90 சதவீத ஊராட்சிகளில் மின் கட்டணம் ரூ.10 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை பாக்கி உள்ளதால் இதை முறையாக செலுத்த முடியாமல் ஊராட்சிகள் திணறுகின்றன. நிதியின்மையால் வளர்ச்சிப்பணிகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் உள்ளன. ஒரு ஒன்றியத்திற்கு குறைந்தது 2, 3 ஊராட்சிகளில் மட்டுமே கல்குவாரிகள், நுாற்பாலைகள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் ஓரளவு நிதி நெருக்கடி இல்லை. ஆனால் மற்ற ஊராட்சிகளில் முறையான தொழில் வருவாய் இல்லாததால் மின் கட்டணங்களை கூட செலுத்த முடியாமல் திணறி வருகின்றன. குறிப்பாக குடிநீர் மின்மோட்டார்கள், தெரு விளக்குகள், ஊராட்சி அலுவலகம், நுாலகம், சேவை மையக் கட்டடம் என மின் தேவைகளின் பயன்பாடும் அதிகரிப்பும் தொடர்கிறது. சில ஊராட்சிகளில் அரசு பள்ளிகள், பால்வாடி, அங்கன்வாடி மையங்களும் அடங்கி உள்ளன . இதில் பெரும்பாலான ஊராட்சிகளில் தெரு விளக்குகளை பகல் நேரங்களில் அணைப்பதே கிடையாது. 24 மணி நேரமும் எரிந்து கொண்டு தான் உள்ளன. இதனாலும் மின் கட்டணம் உயர்கிறது. தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான ஊராட்சிகளில் குறைந்தது ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.60 லட்சம் வரை மின்கட்டணம் பாக்கி உள்ளன.ஊராட்சிகளுக்கு தமிழக அரசு வழங்கும் மாநில நிதிக்குழு மானிய நிதியும் குறைந்துவிட்ட நிலையில் ஊராட்சிகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இதன் காரணமாக வளர்ச்சி பணிகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ....... 24 மணி நேரமும் எரியும் விளக்குகள் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி மாநில அளவில் 90 சதவீத ஊராட்சிகளில் மின் கட்டண பாக்கி நிலுவையில் உள்ளது. இதற்கெல்லாம் காரணம் ஊராட்சிகளில் 24 மணி நேரமும் தெருவிளக்குகள் எரிகின்றன. அதை அணைப்பதற்கு ஆள் இல்லை. அதேபோல் இரவு நேரங்களில் குடிநீர் மின் மோட்டார்களை இயக்கும் ஆப்பரேட்டர்கள், ஆங்காங்கே முறையாக மோட்டாரை ஆப் செய்வதில்லை. இதை முறைப்படுத்தினாலே ஒரளவு மின் கட்டணம் குறையும். ஏ.ராஜரத்தினம், விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர், குஜிலியம்பாறை.