ஏன் இந்த பாரபட்சம்: ரசாயன உரம் பயன்படுத்துவோருக்கு சலுகை: இயற்கை விவசாயிகளுக்கு இல்லை மானியம்
மாவட்டத்தில் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் நிலத்தின் மண்வளம் பாதிக்கப்பட்டு மண் மலடாகிறது. மண்ணில் போதிய சத்துகள் இல்லாததால் பயிர்களில் பூச்சி, நோய் தாக்குதல் அதிகரிக்கிறது. நோய் தாக்கத்தை குறைக்க துாவப்படும் ரசாயன உரங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பூச்சிகளை விரட்ட பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் பயிர்களில் நீண்ட நாட்களுக்கு நீடித்திருப்பதால் அதை சாப்பிடும் மனிதர்களின் உடல் நலனும் பாதிக்கிறது. பயிர் சுழற்சி நடைமுறையை பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டு ஒற்றை பயிரான நெல் ,வாழையை தொடர்ந்து சாகுபடி செய்வதால் மண்வளம் பாதிக்கப் படுவதோடு பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.இயற்கை விவசாய முறையில் மாட்டுச்சாணம் முக்கிய இடுபொருளாக உள்ளது. மாடு இல்லாதவர்கள் சாணத்தை விலைக்கு வாங்கி மண்புழு உரம், பஞ்சகாவ்யம், ஜீவா மிர்தம் போன்ற இயற்கை உரங்களை தயாரித்து பயிருக்கு தருகின்றனர். இதற்கான உற்பத்தி செலவு கூடுதலாகிறது. இதே நிலை நீடித்தால் இயற்கை விவசாயத்திற்கு மாறிய விவசாயிகள் மீண்டும் ரசாயன உரத்திற்கு மாறிவிடுவர்.