உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மா பூக்களை தாக்கும் புழுக்கள்... பருவநிலை மாற்றத்தால் விளைச்சல் பாதிப்பு

மா பூக்களை தாக்கும் புழுக்கள்... பருவநிலை மாற்றத்தால் விளைச்சல் பாதிப்பு

நத்தம்: நத்தம் பகுதியில் பிரதான விவசாயமான மா விவசாயம் செல் பூச்சி தாக்குதலாலும், பூக்களை தாக்கும் அதிகப்படியான புழுக்கள் உற்பத்தியாளும், பருவநிலை மாற்றத்தால் பூக்கள் இல்லாமல் புதிய கிளைகள் முளைத்ததாலும் மா விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை உள்ளது.நத்தம் வட்டத்தில் 6800 ஹெக்டேர், சாணார்பட்டி வட்டத்தில் 4980 ஹெக்டேர் என 11,780 ஹெக்டேரில் மா விவசாயம் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் அதிகம் மா விவசாயம் செய்யும் பகுதிகளில் ஒன்றாக நத்தம் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகளில் 60 சதவீதத் திற்கும் மேற்பட்டோர் மா விவசாயமே செய்கின்றனர்.மாமரங்கள் சீசன், கோடை என ஆண்டுக்கு இருமுறை பலன் தருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக மா விவசாயம் உள்ளது. இங்கு கல்லாமை, காசா, செந்துாரம், மல்கோவா, அல்போன்சா, சப்பட்டை, வங்கனவள்ளி, காதர் என 20க்கு மேற்பட்ட வகை மாங்காய்கள் விளைவிக் கப்பட்டு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.2022---23 ல் அதிகப்படியான மழை, வெயில் உள்ளிட்ட கால நிலை மாற்றங்களால் மா விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு விவசாயிகள்,மா குத்தகைதாரர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.இந்தாண்டாவது நஷ்டத்தை ஈடு செய்துவிடலாம் என மா விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு போதுமான மழை இல்லை பருவநிலை மாற்றத்தால் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட மா மரங்களில் பூக்கள் பூக்காமல் மாறாக புதிய கிளைகள் வளர்ந்துள்ளது. பூக்கள் பூத்திருக்கும் சில மரங்களிலும் செல் பூச்சிகள் தாக்கியும், அதிகப்படியான பூக்களை தின்னும் புழுக்கள் தானாக உருவாகியும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்களில் இருந்து பிஞ்சுகள் வைக்காமல் பூக்கள் கருகத் தொடங்கி உள்ளன.இதனால் பூச்சி மருந்து தெளித்த செலவு தொகைக்கு கூட மாங்காய் விளைச்சல் இல்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனால் மா விவசாயிகள் மாந்தோப்பு குத்தகைதாரர்கள், தனியார் மாம்பழ கூழ் தொழிற்சாலை நிறுவனங்கள் என பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை உள்ளது.

புது மருந்தால் பாதிப்பு

சி.ஆர்.ஹரிஹரன், தலைவர்,மாங்காய் கடை வணிகர்கள் சங்கம் ,வேம்பார்பட்டி:இப்பகுதி விவசாயிகள் சில ஆண்டுகளுக்கு முன் இயற்கை விவசாயமே செய்து வந்தனர். சில தனியார் பூச்சி மருந்து நிறுவனங்கள் அவர்கள் தயாரித்த மருந்துகளை தெளித்தால் விளைச்சல் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என கூறி புதுப்புது மருந்துகளை விற்பனை செய்தனர். இதனால் இந்தாண்டு விளைச்சல் பெரிதும் பாதித்தது. மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து என்ன வகையான மருந்துகளை தெளிக்க வேண்டும் என தெளிவுபடுத்த வேண்டும்.

விவசாயிகளுக்கு பெரும் இழப்பு

ராஜ்கபூர், மா விவசாயி, கணவாய்பட்டி: பூச்சி மருந்து கடை விற்பனையாளர்கள் புது புது மருந்துகளை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். அறியாமையில் இதனை பயன்படுத்தியதால் பூக்கள் அனைத்தும் கருகி மா விளைச்சல் குறைந்துள்ளது. பூச்சி தாக்குதலால் விளைவித்த மாங்காய்களை சந்தை படுத்தவும் வலியில்லாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். விளைச்சலை அதிகப்படுத்த வேண்டும் என எண்ணி புது மருந்துகள் அதிகம் பயன்படுத்தியதால் பூக்கள் கருகி விளைச்சலை பெரிதும் பாதித்துள்ளது.இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

கை கொடுத்த கூழ் ஆலை

ராஜா, மா விவசாயி, குட்டூர் நத்தம்: நத்தம் பகுதியில் மூன்று ஆண்டுகளாக மா விளைச்சல் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறோம். கடந்தாண்டு புது வகையான பூச்சிகள் தாக்கியதால் வியாபாரிகள் வாங்க மறுத்தனர். அப்போது தனியார் மாம்பழ கூழ் தொழிற்சாலை நிறுவனங்கள் தான் மாங்காய்களை கொள்முதல் செய்து விவசாயிகள் நஷ்டத்தை ஓரளவிற்கு குறைத்தனர். இந்தாண்டும் பருவநிலை மாற்றத்தால் முக்கால்வாசி மரங்கள் பூக்கள் பூக்காமல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை