உயிர்வாழ் சான்று வழங்கும்போது திருத்தம்ஓய்வூதியர்களுக்கு கருவூல அலுவலர் கடிதம்
'உயிர்வாழ் சான்று வழங்கும்போது திருத்தம்'ஓய்வூதியர்களுக்கு கருவூல அலுவலர் கடிதம்ஈரோடு:ஈரோடு மாவட்ட கருவூல அலுவலர் சேஷாத்திரி தலைமையில், கடந்த, 4ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடந்தது. அப்போது தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு வழங்கி கோரிக்கை விடுத்தனர். இதற்கு மாவட்ட கருவூல அலுவலர் சேஷாத்திரி நேற்று வழங்கிய பதில் கடிதத்தில் கூறியதாவது: ஓய்வூதியர் காலமான பின், குடும்ப ஓய்வூதிய முன் மொழிவுகள் சமர்பிக்கும்போது ஒப்புகை சீட்டு வழங்கி கோரினர். இதுபற்றி விவாதித்து அலுவலகத்தில் முன்மொழிவு பெறப்பட்ட தேதியில் இருந்து, 3 வேலை நாளில் நடவடிக்கை விபரம் தெரிவிக்கப்படும். கம்முடேஷன் மீளப்பெறுதல் தொடர்பான தேதி, தவறாக பல ஓய்வூதியதாரர்களுக்கு எழுப்பப்படுகிறது. இதற்கு இணைய தள அளவில் சரி செய்து, ஒப்புதல் வழங்கி தீர்வு காணப்படும். மருத்துவ காப்பீடு திட்டம் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தனர். இதுபற்றிய மனுவை ஒரு வார காலத்துக்குள் நிறுவனத்துக்கு அனுப்பி விபரம் தெரிவிக்கப்படும்.உயிர் வாழ் சான்றிதழ் வழங்கும்போது ஓய்வூதியதாரரின் மொபைல் எண், வீட்டு விலாசம், தவறாக உள்ள விபரங்களை எழுத்துப்பூர்வமாக வழங்கினால் உடன் சரி செய்து தரப்படும். ஓய்வூதியர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் தொகை குறித்து எஸ்.எம்.எஸ்., அனுப்ப, தொடர்புடைய வங்கிக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆதார் கார்டுகளை, ஓய்வூதியதாரர் புதுப்பித்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.