கோபிசெட்டிபாளையம்: கோபியில் ரேஷன் கடையில் நடந்த ஆய்வில், பழைய ஆவணங்களை காண்பித்தால் ஆர்.டி.ஓ., மற்றும் தாசில்தாரை ஈரோடு கலெக்டர் ஆனந்தகுமார் கண்டித்தார். கோபி வட்ட வழங்கல் அலுவலகத்தில் கலெக்டர் ஆனந்தகுமார் நேற்று திடீர் ஆய்வு செய்தார். ஆவணங்களை சரிபார்த்த பின், வாய்க்கால் சாலையில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். ரேஷன் கடைக்கு சென்ற கலெக்டர் ஆனந்தகுமார், ரேஷன் கடை விற்பனையாளரிடம், காஸ் பதிவு குறித்து விளக்கம் கேட்டார். கலெக்டரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் விற்பனையாளர் விழித்தார். 'காஸ் ஏஜன்ட்களிடம் இருந்து காஸ் பதிவு குறித்த பட்டியல் வந்திருக்குமே,' என கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பாவு தெரிவித்தார். ரேஷன்கடை விற்பனையாளரிடம் பட்டியல் இல்லை. அருகில் இருந்த கூட்டுறவு சங்க அதிகாரி, ஒரு பட்டியலை கொடுத்தார். அவை, பழைய பட்டியல். ஏற்கனவே சிவில் சப்ளை அலுவலகத்தில் சரிபார்க்கப்பட்ட பட்டியலும், ரேஷன் கடையில் கொடுக்கப்பட்ட பட்டியலும் ஒன்றாக இருந்தது. 'இரு பட்டியலும் ஒன்றாக இருக்கிறது' என கலெக்டர் ஆனந்தகுமார் கேட்டார். அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்தனர். சிவில் சப்ளை தாசில்தார் மாதேஸ்வரனிடன், ''நீங்கள் பணிக்கு வந்து எத்தனை நாட்களாகிறது'' என, கலெக்டர் கேட்டார். ''சிவில் சப்ளை தாசில்தாராக வந்து ஒரு மாதமாகிறது,'' என தாசில்தார் விளக்கமளித்தார். ''அதிகாரிகளுக்கு வேகம் முக்கியமல்ல. தெளிவு தான் முக்கியம்,'' எனக்கூறி தாசில்தாரை கண்டித்தார். அத்துடன், ஆர்.டி.ஓ., மீனா பிரியதர்ஷினியிடம், ''நாம் அரசியல் பண்ண வரவில்லை. மக்கள் நலப்பணிக்காக வந்துள்ளோம். அதிகாரிகளிடம் ஈகோ கூடாது,'' என கடிந்தார். ரேஷன் கடைக்கு வந்த அம்மாசி என்ற பெண்ணிடம் இருந்த ரேஷன் கார்டை வாங்கி, காஸ் பதிவை கலெக்டர் பார்த்தார். ரேஷன் கார்டில், அம்மாசியின் மூத்த மகன் ஏற்கனவே இறந்து விட்டதும், கார்டில் இதுவரை பெயர் அவர் பெயர் நீக்கப்படாததும் தெரியவந்தது. ''இவ்வாறான கார்டுகளை சிவில் சப்ளை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். காஸ் ஏஜன்ட்கள் கொடுத்துள்ள புதிய பட்டியல் படியே, ரேஷன் கார்டுகள் சரிபார்க்க வேண்டும்,'' என கலெக்டர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ரேஷன் கடையில் உள்ள உளுந்து, அரிசி போன்ற பொருட்கள் சரியாக உள்ளதா? என சரிபார்த்துவிட்டு புறப்பட்டார்.