ஈரோடு:''நீட் தேர்வில் இதுவரை இல்லாதபடி குளறுபடி நடந்தது குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்,'' என, இந்திய மருத்துவ சங்க தமிழக கிளை தலைவர் டாக்டர் அபுல் ஹாசன் கூறினார்.ஈரோட்டில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 'நீட்' தேர்வில் இதுவரை இல்லாத அளவு குளறுபடிகள் நடந்துள்ளதை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 1,563 மாணவர்களுக்கு மட்டும், நீட் தேர்வு வைப்பது, முறைகேடுகளுக்கு தீர்வாகாது. பாட்னா சாஸ்திரி நகர் போலீஸ், நீட் கேள்வித்தாள் கசிவு பற்றி விசாரிக்கிறது. சில மாணவர்கள், 30 லட்சம் முதல், 50 லட்சம் ரூபாய் வரை புரோக்கர்களுக்கு வழங்கி கேள்வித்தாள்களை பெற முயன்றது தெரியவந்தது. இதுபற்றி மூடி மறைக்காமல் உண்மைகளை வெளியிட வேண்டும். கேள்வித்தாள் கசிவு பற்றி, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெலிகிராம் மூலம், முதல் நாளே மாணவர்களுக்கு கிடைத்துள்ளது என்பது அதிர்ச்சியானது.குஜராத், கோத்ரா நகரில் உள்ள நீட் சென்டரில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். 12 கோடி ரூபாய் வரை புரோக்கர்களுக்கு பணம் கைமாறியதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றிய உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். நீட் தேர்வில், 67 மாணவர்கள், 720க்கு, 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆனால், 2023ல், இரண்டு பேர் மட்டுமே, 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். 2022ல் ஒருவரும், 720 மதிப்பெண் பெறவில்லை. 2021ல், மூவர் மட்டுமே பெற்றுள்ளனர் என தெரிய வருகிறது.பகதுருகன் என்ற சென்டரில் ஆறு மாணவர்கள், 720க்கு, 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்கள், எவ்வாறு மதிப்பெண் பெற்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த குழப்பத்தால், 1.1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் சி.பி.ஐ., விசாரணை நடத்தி, முறையான வழிமுறையை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு கூறினார்.