ஈரோடு,:ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தவிர, மற்றவர்கள் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் எனக்கூறி, நிர்வாகிகள் பட்டியல் உலா வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அ.தி.மு.க., ஜாதிக் கட்சியாக மாறி வருகிறது என ஈரோடு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில் ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி என சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன. இப்பகுதியில் கவுண்டர்கள் அதிகமாகவும், அடுத்ததாக முதலியார், அடுத்து பிற சமூகத்தினரும் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலின்போதும், தங்கள் சமூகத்துக்கு வாய்ப்பு தர முதலியார் சமூகத்தினர் வலியுறுத்துவர். ஆனால், கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்களே வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில் செயலர் ராமலிங்கம், எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் தென்னரசு, மகளிரணி செயலர் மல்லிகா, அம்மா பேரவை செயலர் சதீஸ்குமார் என மாவட்ட, மாநில பதவி - பெயர் - ஜாதியை குறிப்பிட்டு, பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் கலைப்பிரிவு செயலர் சேகர் - வேட்டுவ கவுண்டர், கட்டுமான பிரிவு செயலர் மணிகண்டன் - வன்னியர், தொழிற்சங்க செயலர் துரைசேவுகன் - தேவேந்திரகுல வேளாளர், மீனவரணி செயலர் சுமன்குமார் - செம்படவர் என, 10க்கும் குறைவானவர்கள் பெயரை குறிப்பிட்டு, 'மாநகர் மாவட்ட அ.தி.மு.க., - ஜாதி கட்சியாக செயல்படுகிறது' என குறிப்பிட்டுள்ளனர். இப்பட்டியல் அரசியல் வட்டாரங்களில் வேகமாக பரவுவதால் அ.தி.மு.க.,வில் புது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பிடிக்காதவர்கள் ஏற்படுத்தும் சிக்கல்!
பிற மாவட்டங்களில் பிறந்து, ஈரோட்டுக்கு வந்து பல ஆண்டாக பணி செய்யும், கவுண்டர் அல்லாத ஜாதியினருக்கும் அ.தி.மு.க.,வில் பொறுப்புகள் வழங்கி, பணி செய்து வருகின்றனர். அந்தந்த தொழிலில் அல்லது பகுதியில் சிறப்பாக பணி செய்பவர்களுக்கே, மாவட்ட அமைப்பும், தலைமையும் பதவி வழங்கி உள்ளது. அவர்களது செயல்பாட்டை பார்த்துத்தான் பதவி வழங்கி உள்ளோம்; ஜாதியை பார்க்கவில்லை.கட்சி பதவியில் உள்ளவர்களில் தாழ்த்தப்பட்டவர்கள், நாடார், முதலியார், வன்னியர், சிறுபான்மையினர் என அனைவரும் உள்ளனர். அ.தி.மு.க.,வை பிடிக்காதவர்கள் ஏற்படுத்தும் சிக்கல் இது. ராமலிங்கம், ஈரோடு மாநகர் மாவட்டச் செயலர், அ.தி.மு.க.,