ஈரோடு,: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா, பூந்துறை சேமூர் பஞ்., தலைவர் தங்க தமிழ்செல்வன்; தி.மு.க.,வை சேர்ந்தவர். மொடக்குறிச்சி தாலுகா அலுவலக ரெக்கார்டு கிளார்க் மணிகண்டன். இருவரும் பூந்துறை சேமூர் பிரிவு சாலையில், துப்பாக்கியுடன் சண்டை போடும் வீடியோ பதிவு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாலையோர, 'சிசிடிவி' கேமராவில், 8:30 நிமிடங்கள் பதிவான காட்சி பரவி வருகிறது.வீடியோவில், தி.மு.க., கொடி கட்டிய காரில் வேகமாக வந்து, சாலையோரம் மரத்தடியில் தங்க தமிழ்செல்வன் நிற்கிறார். பின்னால் இரு பைக்கில் வந்த, மூன்று பேருடன் பேசி கொண்டிருக்கின்றனர். எதிர்திசையில் நீலநிற சட்டையுடன் அரசு ஊழியரான மணிகண்டன் பைக்கில் வந்து கார் முன் நிறுத்துகிறார். தொடர்ந்து, இருவரும் கட்டிப்பிடித்து சண்டையிடுகின்றனர். உடனிருந்தவர்கள் விலக்கும் நேரம், காரை நோக்கி தள்ளியபடி சென்ற பஞ்., தலைவரும், மணிகண்டனும், இரட்டைக் குழல் துப்பாக்கியை கையில் வைத்து சண்டையிடுகின்றனர். அப்போது, மணிகண்டன், துப்பாக்கியை பறித்து வெளியே வருகிறார். உடன் வந்தவர் மணிகண்டனை சமாதானம் செய்து, துப்பாக்கியை திரும்ப கேட்கிறார். மணிகண்டன் துப்பாக்கியை தராமல் மரத்தடிக்கு செல்கிறார். கார் அருகே பஞ்., தலைவரை மற்றவர்கள் சமாதானம் செய்கின்றனர்.ஒரு கட்டத்தில் மீண்டும் வேட்டியை மடித்துக் கட்டிய பஞ்., தலைவர், மணிகண்டனை கட்டிப்பிடித்து சண்டையிட்டவாறு, துப்பாக்கியை பறித்து காருக்கு செல்கிறார். அவரை அங்கிருந்தவர்கள் காரை விட்டு வெளியே வராதபடி தடுக்கின்றனர். கோபமாக பேசும் மணிகண்டன், தன் பைக்கை எடுத்துச் செல்கிறார். இவ்வாறாக வீடியோ பதிவு உள்ளது.கிராம மக்கள் கூறியதாவது: பூந்துறை சேமூர் பஞ்சாயத்தில், 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதுபற்றி மணிகண்டனின் உறவினர்கள், பஞ்., தலைவர் அலுவலகம் சென்று பேசினர். அதை விரும்பாத பஞ்., தலைவர், அங்கு வந்த பெண்களிடமும், மணிகண்டனிடமும் கடுமையாக பேசினார். இதுபற்றி பேச, பூந்துறை சேமூர் பிரிவு சாலைப் பகுதிக்கு வரும்படி மணிகண்டனை, பஞ்., தலைவர் அழைத்துள்ளார். அதன்படி அந்த இடத்துக்கு வந்தபோது, இருவருக்கும் பிரச்னை நடந்துள்ளது. இவ்வாறு கூறினர்.மணிகண்டன் கூறும்போது, ''இதுபற்றி ஏதும் பேச வேண்டாம். அப்பிரச்னை பேசி முடிக்கப்பட்டு விட்டது. ரொம்ப பயமாக உள்ளது. எனக்கும், குடும்பம், குழந்தை உள்ளது. இதை விட்டுவிடுங்கள்,'' என்றார்.பஞ்., தலைவர் தங்கதமிழ்செல்வன் கூறுகையில், ''எல்லாம் சுமுகமாக போய் கொண்டிருக்கிறோம். இதை பெரிது பண்ணாதீங்க. அந்த பையன் எதிர்காலம் பாதித்துவிடும். நாங்களும் பேசி சமாதானமாகி விட்டோம்,'' என்றார்.ஈரோடு எஸ்.பி., ஜவஹர் கூறும்போது, ''வீடியோவை பார்த்தேன். அது துப்பாக்கி இல்லை, 'ஏர்கன்'. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.