| ADDED : ஆக 21, 2024 01:01 AM
'வாய்க்காலில் கசிவு ஏற்பட்ட இடம், ௧௦௦ அடி நீளம் கொண்ட 'கம்மால்' எனப்படும், தரையை குடைந்து அமைக்கப்பட்ட பகுதியாகும். இதற்குள் ஆட்கள் ஊர்ந்துதான் செல்ல முடியும். இல்லையேல் குத்துக்காலிட்டு அமர்ந்தபடி செல்ல வேண்டும். அதனால்தான் கசிவு ஏற்பட்டவுடன், அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது. இருட்டான பகுதி என்பதால் நீர்க்கசிவு ஏற்பட்ட இடத்தை உடனடியாக கண்டறிவதும் சிரமமானது.மேலும் தொடர்ந்து தண்ணீர் வரும் நிலையில் இடையூறாகவே இருக்கும். இதனால்தான் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டு, எந்த மாதிரியான கசிவு என்பதை கண்டறியும் பணி தொடங்கியுள்ளது. கசிவு ஏற்பட்ட இடத்தை கண்டுபிடித்தவுடன் சீரமைப்பு நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் நடக்கும்' என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பெருந்துறை, ஆக. 21-பவானிசாகர் அணையில் இருந்து ----கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு, கடந்த, 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, 4:00 அளவில் பெருந்துறை ஒன்றியம், நல்லாம்பட்டி கிராமம், செந்தாம்பாளையம் குளம் ஒட்டங்காடு பகுதியில், கரையை ஒட்டிய பகுதியில், கீழ்பவானி வாய்க்காலில் சிறு அளவில் நீர் கசிவு ஏற்பட்டது.தகவலறிந்து நீர்வளத் துறை அதிகாரிகள் சென்றனர். கசிவை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதேசமயம் கசிவால், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட நீர், நள்ளிரவில் நிறுத்தப்பட்டது. வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமி, நீர் கசிவு ஏற்பட்ட பகுதிக்கு நேற்று காலை சென்றார். தண்ணீர் கசிவை விரைந்து சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: தண்ணீர் கசிவை தடுக்க தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ள, ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இரு தினங்களுக்குள் கசிவை சரி செய்து, தண்ணீர் விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த போகத்துக்கான தண்ணீர் திறப்பில் எவ்வித தடையும் இருக்க கூடாது. அடுத்த போகத்திற்கான தண்ணீர் திறந்து விடும் பொழுது, முறையாக திட்டமிட்டு, அதற்கான நிரந்தர தீர்வு காண ஆலோசனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.