பால் உற்பத்தியாளர் மார்ச் 18ல் போராட்டம்
ஈரோடு; ஈரோட்டில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் சங்கத் தலைவர் முகம்மது அலி கூறியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு, 3 ரூபாய் குறைத்தனர். இதனால் ஆவினுக்கு ஆண்டுதோறும், 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதை மானியமாக அரசு வழங்கும் என, தெரிவித்தனர். இதுவரை வழங்காததால் மூன்றரை ஆண்டில், 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு, ஆவின் நஷ்டத்தில் இயங்குகிறது.லிட்டருக்கு, 3 ரூபாய் ஊக்கத்தொகை தருவதாக கூறியதிலும் முறையாக தருவதில்லை. ஆவின் நிர்வாகம் பசும்பால், 45 ரூபாய்க்கும், எருமை பால், 51 ரூபாய்க்கும் கொள்முதல் செய்ய அறிவிக்க வேண்டும். வழக்கம் போல ஊக்கத்தொகை தர வேண்டும். இவ்விஷயத்தில் அரசு மிக மெத்தனமாக உள்ளது. இதை கண்டித்து வரும், 18ல் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நாளில், மாவட்ட தலைநகரில் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு கூறினார்.'ஐ.எஸ்.ஐ., பார்முலா'தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க பொதுச்செயலர் ராஜேந்திரன், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு நேற்று அனுப்பிய மனு:தமிழகத்தில் ஆவின் பால் தரத்தை கண்டறிய, எம்.ஆர்.எப்., முறை கையாளப்படுகிறது. இதற்கு பதில், இண்டியன் ஸ்டேண்டர்ட்ஸ் இன்ஸ்டிடியூட் எனப்படும் ஐ.எஸ்.ஐ., முறையை அமல்படுத்த வேண்டும். வரும் சட்டசபை கூட்டத்தொடரில் பால்வளத்துறை மானிய கோரிக்கையில், இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.