ஈரோடு : தமிழகத்தில் பல பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீர் பருகியதால், வாந்தி, பேதி ஏற்பட்டு, 20 நாட்களில் ஒன்பது பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் கசிவு மற்றும் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் கலப்பதும், குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்காததுமே பாதிப்புக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.இதன் எதிரொலியாக, ஈரோடு மாநகராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் சிறிய அளவிலான, 'சின்டெக்ஸ்' தொட்டிகளை துாய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கலெக்டர் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள, 64 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 220 சின்டெக்ஸ் தொட்டிகளை துாய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. இன்னும் இரு நாட்களில் பணி நிறைவு பெறும். இது தவிர மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை, 15 நாட்களுக்கு ஒரு முறை துாய்மை செய்யவும், நீரேற்றம் செய்யும்போது குளோரினேஷன் செய்யவும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு கூறினர்.
குடிநீர் மாதிரிகளை பரிசோதியுங்கள்
சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவுகுடிநீர் வடிகால் வாரியம், சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்படும் குடிநீரை, மாதந்தோறும் பரிசோதனைக்கு உட்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும். குடிநீர் தொட்டி அல்லது சுத்திகரிப்பு நிலையங்களில் எவ்வாறு குளோரினேஷன் செய்யப்படுகிறதோ, அதே அளவில், குழாய்கள் வாயிலாக வீடுகளுக்கு செல்லும் வரை, சுத்தமான நீராக செல்வதை உறுதி செய்ய வேண்டும்.குறிப்பாக, மாதந்தோறும் வீடுகளுக்கு வரும் குடிநீர் மாதிரிகளை சேகரித்து, ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும். குறைகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நிவர்த்தி செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.