| ADDED : ஏப் 10, 2024 01:53 AM
ஈரோடு:சத்தியமங்கலம் அருகே டி.ஜி.புதுார் நால்ரோட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வருபவர் வினோத்பாபு, 48; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ஈரோடு கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பிய மனுவில் கூறியதாவது: நான், திருப்பூர் மாவட்டம் குன்னத்துாரில் வசிக்கிறேன். எனக்கு சொந்தமாக ஈரோடு மாவட்டம் டி.ஜி.புதுார் உட்பட பல இடங்களில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறேன். கடந்த, 30ல் டி.ஜி.புதுார் நால்ரோட்டில் உள்ள பங்க்கில் இருந்து, நான்கு நாட்களில் பங்க்கில் சேகரமான தொகை, 10 லட்சம் ரூபாயை, வீட்டுக்கு எடுத்து சென்றேன். மறுதினம் வங்கியில் செலுத்த திட்டமிட்டு, அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து வைத்திருந்தேன். அத்துடன் வணிக வரித்துறை சான்று, வங்கி பரிவர்த்தனை பட்டியல், விற்பனை நிலைய விபரங்களும் வைத்திருந்தேன். கோபி, அயலுார், சமத்துவபுரம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், எனது காரை தடுத்தனர். 10 லட்சம் ரூபாய் இருப்பதை நானே தெரிவித்து, ஆவணங்களை காட்டியும், பணத்தை பறிமுதல் செய்து, 'எங்கள் உயர் அதிகாரியிடம் ஒப்படைக்கிறோம். அங்கு பெற்று கொள்ளுங்கள்' என பறக்கும் படை தலைமை அதிகாரி வேலுசாமி, எஸ்.ஐ., ரத்தினம் உள்ளிட்ட அதிகாரிகள், போலீசார் மோசமாக நடந்து கொண்டனர். ஆவணங்களை காட்டியும் பணத்தை பறிப்பது தவறான செயல். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.