| ADDED : ஜூலை 10, 2024 02:43 AM
ஈரோடு;காங்கேயம் அருகே பெரியஇல்லியம் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா, 20, கோவை பி.எஸ்.ஜி. கல்லுாரி மூன்றாமாண்டு மாணவி. ஈரோடு, காந்தி நகரை சேர்ந்தவர் அருண், 22; கோவை தனியார் கல்லுாரி மாணவர். இருவரும் பள்ளியில் படிக்கும்போது நட்பாக பழகிய நிலையில், ஓராண்டாக காதலித்தனர். பிரியங்காவுக்கு வேறிடத்தில் நிச்சயம் நடந்த நிலையில், கடந்த, 7ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பிரியங்கா, ஈரோடு வந்து அருணுடன் ஆந்திர மாநிலம் ஹைதராபாத் சென்றார். இருவரும் திண்டல் கோவில் அடிவாரத்தில் நேற்று திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கோரி ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். வீரப்பன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படவே, மாலையில் அங்கு சென்றனர். இதையறிந்து பெண்ணின் உறவினர்கள் வந்தனர். அருணின் உறவினர்களும் திரண்டதால், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கை கலப்பு வரை சென்றது. இதனால் டவுன் டி.எஸ்.பி., ஜெய்சிங் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அருணுடன் செல்ல பிரியங்கா விருப்பம் தெரிவித்ததால், அவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இருதரப்பை சேர்ந்த ஏராளமானோர் போலீஸ் ஸ்டேஷன் முன் குவிந்ததால் பதற்றம் நிலவியது.