கோபி: திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, கோபி சட்டசபை தொகுதியின், கோபி நகராட்சியில், 30 வார்டுகளில் வசிக்கும், 65 ஆயிரம் மக்களுக்கு, செங்கலரை கிராமத்தில், பவானி ஆற்றில் தண்ணீர் உறிஞ்சி சுத்திகரித்து, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக நகராட்சியில், 11 ஆயிரத்து, 805 குடிநீர் இணைப்பு உள்ளது. பைப் லைன் கோளாறு, அழுத்தம் பற்றாக்குறையால், சீராக தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், 2019 மார்ச், 6ல் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தில், 52.80 கோடி ரூபாயில், 24 மணி நேரமும் சீரான குடிநீர் கிடைக்கும் வகையில், குடிநீர் திட்டப்பணி துவங்கியது. கடந்த, 2019ல் லோக்சபா தேர்தல் சமயத்தில், 18 மாதங்கள் ஒப்பந்த அடிப்படையில் துவங்கிய திட்டப்பணி, இன்னும் முழுமை பெறவில்லை. இதனால் சீரான குடிநீருக்கு வழியின்றி, வார்டு மக்கள் அவதியுறுகின்றனர்.இதுகுறித்து நகராட்சி சிட்டிங் கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது: ஒரு வீதிக்கு குடிநீர் வந்தால், மறு வீதிக்கு தண்ணீர் வருவதில்லை. குழாய் பதிப்பு மற்றும் நீர் நிர்வாகம் அறிந்த பொறியாளர் மூலம் பணியை செய்திருந்தால், திட்டப்பணி முன்பே முழுமை பெற்றிருக்கும். கட்டடம் கட்டுமான பிரிவு பொறியாளரை கொண்டு, குடிநீர் திட்டப்பணி மேற்கொண்டால், எப்படி திட்டம் முழுமை பெறும். ஐந்தாண்டை கடந்தும், குடிநீர் கிடைக்காத பகுதியில், ஓட்டு சேகரிக்க சென்றால், மக்கள் கேள்வியும் எழுப்பினால், தர்ம சங்கடம் ஏற்படும். திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நகராட்சியில் உள்ள, 30 வார்டுகளில், 22 வார்டுகளில் குடிநீர் திட்டப்பணி முடிக்கப்பட்டுள்ளது. பணி முடிக்காத பகுதிகளில், 13 ஆயிரத்து 488, பழைய பைப் லைன் மூலமாக தண்ணீர் வினியோகம் செய்கிறோம். பணிகள் முடிக்காத பகுதியில் புதிய பைப் லைனில் சோதனை ஓட்டம் நடக்கிறது. எஞ்சிய பணிகளை விரைவில் முடிக்கப்படும்' என்றார்.