ஈரோடு : ஈரோடு-பள்ளிபாளையம் இடையே உள்ள, காவிரி ஆற்றின் பாலத்தை ஒட்டிய பகுதியிலும், பிற பகுதிகளிலும் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை, பாசனத்துக்கு நீர் திறப்புக்கு முன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை இன்மையாலும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கான தண்ணீரை திறக்காததாலும், மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது. டெல்டா பாசனத்துக்கு ஜூன், 12ல் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காலத்தை கடந்து, தண்ணீர் திறக்கப்படாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.சேலம் முதல் ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு காவிரி ஆறு, கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் வழங்குகிறது. குடிநீருக்கான தண்ணீர் மட்டுமே தற்போது வரத்தாகிறது. இதனால் ஈரோடு, கருங்கல்பாளையம்-நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை இணைக்கும் காவிரி ஆற்றுப்பாலத்தை ஒட்டி பல மீட்டர் துாரத்துக்கும், வெண்டிபாளையம் பேரேஜ் பகுதி, பல இடங்களில் தண்ணீர் தேங்கி கிடங்கும் இடங்களிலும் மிகக்கடுமையாக ஆகாயத்தாமரை வளர்ந்துள்ளது. இதனால், நீரோட்டம் தடைபடுகிறது.குடிநீருக்கான தண்ணீர் மாசுபடுகிறது. ஆற்றில் பிளாஸ்டிக் கழிவு, இறைச்சி கழிவு, ஈரோடு மாநகராட்சி, பள்ளிபாளையம் நகராட்சி உட்பட பல்வேறு உள்ளாட்சிகளின் கழிவு நீர் போன்றவை, காவிரி ஆற்றில் கலந்து ஆகாயத்தாமரை வளர்ந்துள்ள இடங்களில் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. பருவமழை துவங்கி, கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்தான பின்னரே, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். அதற்கு முன்பாக, காவிரி ஆற்றில் கடுமையாக வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையை முற்றிலுமாக அகற்ற வேண்டும்.இவை வளராமல் தடுக்க நிரந்தர தீர்வும் காண, பொதுப்பணித்துறை, நீர் வளத்துறை, வேளாண் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் போன்றவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒவ்வொரு கால கட்டத்திலும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அரசு சார்பில் ஆகாயத்தாமரை வளர்வதை தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பது உண்மை.