| ADDED : ஜூன் 07, 2024 07:33 PM
ஈரோடு:லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதால், மூடி வைக்கப்பட்ட தலைவர் சிலைகள், கல்வெட்டுக்கள், பெயர் பலகைகள் திறக்கப்பட்டன.லோக்சபா தேர்தல் கடந்த மார்ச், 16ல் அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. இதன்படி ஈரோடு பி.எஸ்.பார்க்கில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., - கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோர் சிலைகள், முனிசிபல் காலனியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை உட்பட பல்வேறு பகுதியில் உள்ள தலைவர்கள் சிலைகள் துணியால் மூடப்பட்டன. பல்வேறு கட்டடங்களில் தலைவர்கள் பெயர் கொண்ட கல் வெட்டு, பெயர் பலகை, அம்மா உணவகத்தில் பெயர் பலகை, உள்ளாட்சி அமைப்பு அலுவலகத்தில் பிரதிநிதிகளின் அறைகளின் பெயர் பலகை, பொது இடங்களில் உள்ள தலைவர்களின் போட்டோக்கள் பேப்பர் ஒட்டியும், துணிகள் மூலமும் மூடினர். கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. அரசு அலுவலக அறைகளில் தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டன.நேற்று முன்தினம் மாலை, தேர்தல் நடத்தை விதி முழுமையாக விலக்கி கொள்ளப்படுவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தலைவர் சிலைகளை சுற்றி இருந்த துணிகள் நேற்று அகற்றப்பட்டன. பிற கட்டடங்கள், பொது இடங்களில் தலைவர் படங்கள், பெயர் பலகை, கல் வெட்டுக்களும் மக்கள் பார்வைக்கு வந்தது.