38 கொள்முதல் நிலையம் அமைப்பு தினமும் 1,500 டன் நெல் கொள்முதலுக்கு ஏற்பாடு
ஈரோடு ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்ட விவாதம் வருமாறு:பவானி நதி, கொடிவேரி பாசன சபை தலைவர் சுபி தளபதி: தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன பகுதியில் நெல் அறுவடை துவங்கும் நிலையில், 38 நேரடி நெல் கொள்முதல் நிலையம் (டி.பி.சி.,) திறக்கப்படுகிறது. பருவமழை துவங்குவதால், டி.பி.சி.,களில் விவசாயிகளின் நெல், கொள்முதலான நெல்லை பாதுகாப்பாக வைப்பது சிரமம். தேவையான அளவு தார்பாய் வாங்க வேண்டும். உடனுக்குடன் கிடங்குக்கு நெல்லை இயக்கம் செய்ய நடவடிக்கை தேவை. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி: கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் குறைவாகவே வழங்கப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் கந்தராஜா: நடப்பாண்டு, 1,171 கோடி ரூபாய்க்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை கடந்தாண்டைவிட அதிகம். கூடுதலாக விவசாயிகள் கடன் கேட்பதால், கலெக்டர் மூலம் அரசுக்கு மேலும், 400 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதி கோரி பரிந்துரைத்துள்ளோம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி: தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன பகுதியில், 38 டி.பி.சி., திறக்க திட்டமிட்டு, கடந்த, 19ம் தேதி முதல் திறக்கப்பட்டு வருகிறது. தினமும், 1,500 டன் நெல் கொள்முதல் செய்து, நகர்வு செய்வோம். 32 நவீன அரிசி ஆலைகளுக்கு தினமும், 1,000 டன் வரை அனுப்பலாம். மழை வந்தாலும், நாதகவுண்டன்பாளையம் குடோனில், 10,000 டன் இருப்பு வைக்கலாம். மாவட்ட விற்பனைக்குழுவுக்கு சொந்தமான எழுமாத்துார், கணபதிபாளையம் குடோனில் வைக்கப்பட்ட நெல் நகர்வு செய்யப்படுகிறது. மிகப்பெரிய தார்பாய், 35 உள்ளது. தேவைக்கு ஏற்ப மேலும் வாங்கப்படும்.