சேலம், சேலத்தில், ஆட்டோ டிரைவரை அடித்து கொலை செய்த, 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சேலம் சின்னனுார், காளிகவுண்டர் காடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார், 38, இவர் ேஷர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த, 2017 நவ., 15ல், சொந்த வேலைக்காக ஆட்டோவில் தனது மைத்துனர் சேகர் என்பவருடன், சேலம் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு கிளம்பியுள்ளனர். இரவு 9:30 மணியளவில் பெரியவீராணம் பகுதியில் வந்த போது, ஆட்டோவை நான்கு பேர் வழி மறித்துள்ளனர். சொந்த வேலையாக செல்வதால், ஏற்ற முடியாது என சசிகுமார் கூறியதற்கு, அதை மீறி ஆட்டோவில் ஏறியதோடு, கையில் இருந்த கட்டையால் ஆட்டோவின் சைடு கண்ணாடியை உடைத்தனர். தட்டி கேட்ட சசிகுமாரை, உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கினர். அருகில் உள்ளவர்கள் வரவும், விட்டுவிட்டு ஓடியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சசிகுமார் உயிரிழந்தார்.வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரிய வீராணம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ், 28, செல்வ கணபதி, 19, மோகன்குமார், 27, மணிவண்ணன், 27, ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கு, சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நேற்று வழக்கை நீதிபதி எழில்வேலன் விசாரித்து, ஸ்டீபன்ராஜ், செல்வகணபதி, மோகன்குமார், மணிவண்ணன் என, நான்கு பேருக்கும் தலா ஆயுள் தண்டனை, தலா, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.