| ADDED : மே 29, 2024 07:17 AM
ஈரோடு : ஈரோடு, பெரிய சேமூர், எல்லப்பாளையம் சாலை, கன்னிமார் நகரை சேர்ந்தவர் சண்முகன், 34; வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். சண்முகனுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. திருச்சியில் உள்ள மனைவி, குழந்தைகளை பார்க்க, 25ம் தேதி இரவு சென்றார்.நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு வீட்டுக்கு வந்தார். வீட்டில் மின் விளக்கு எரிந்தது. மர்ம நபர்கள் நடமாடுவது தெரியவந்தது. சத்தமிட்டபடி வீட்டுக்குள் சென்றார். வீட்டில் இருந்த ஆசாமிகள் பின்புறம் வழியே தப்பியோடினர். துரத்தி சென்றதில் ஒருவர் பிடிபட்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீரப்பன்சத்திரம் போலீசில் ஒப்படைத்தார். சண்முகன் வீட்டில் இருந்து, 12 பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய், 800 கிராம் வெள்ளி பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.பிடிபட்ட நபர் பெங்களூரு, ராஜன் நகர், அஸ்வத், 35, என தெரியவந்தது. கன்னடம், ஹிந்தி பேசுகிறார். அதேசமயம் அவரிடம் திருட்டு போன பொருட்கள் இல்லை. அவருடன் வந்த இருவரிடம்தான் திருடப்பட்ட பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தப்பிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.