ஆடி அமாவாசை தின வழிபாடு காங்கேயம், தாராபுத்தில் ஜோர்
காங்கேயம்,ஆடி அமாவாசையை ஒட்டி, காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணியசாமி கோவிலில், நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதேபோல் மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், நத்தக்காடையூர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவில், அகிலாண்டபுரம் அகிலாண்டேஸ்வரர் கோவில், காடையூர் காடேஸ்வரர் கோவில், ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவில்களில் சிறப்பு வழிபாடு களை கட்டியது. தவிர முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபட்டனர். பெரும்பாலான மக்களுக்கு, குலதெய்வ கோவில் காங்கேயத்தை சுற்றி அமைந்துள்ளன. இதனால் இந்த கோவில்களிலும் கூட்டம் அலைமோதியது.* தாராபுரம், மாரியம்மன் கோவில், பெரிய காளியம்மன், சின்ன காளியம்மன், அமராவதி ஆற்றங்கரை அகஸ்தீஸ்வரர் உள்பட பல்வேறு கோவில்களில், ஆடி அமாவாசை சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது. அமராவதி ஆற்றங்கரையில் நுாற்றுக்கணக்கான மக்கள், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.