புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்டில் தாறுமாறு பஸ்களால் தொடரும் விபத்து
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி நகராட்சி பஸ் ஸ்டாண்ட்,கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு தினமும், 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ்கள் உள்ளே நுழைய தெற்குப்புறமும், வெளியே செல்ல வடக்குப்புறமும் நுழைவுவாயில் உள்ளது.இதில் உள்ளே நுழையும் பகுதியில், பஸ்கள் வேகமாக திரும்பியதால் விபத்து அபாயம் ஏற்பட்டது. இதனால் நுழைவு வாயில்கள் மாற்றப்பட்டன.அதன்படி சத்தி, நம்பியூர், கோபி மார்க்கமாக பஸ் ஸ்டாண்டுக்குள் வரும் பஸ்கள், சத்திரம் சாலை வழியாக வரவேண்டும். பவானிசாகர், பண்ணாரி மார்க்கமாக வரும் பஸ்கள், வடக்குப்புற நுழைவு வாயில் வழியாக வரவேண்டும். கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் மார்க்க பஸ்கள் தெற்குப்புற நுழைவு வாயில் வழியாக வர நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.ஆனால் பஸ் ஸ்டாண்ட்டின் மூன்று நுழைவு வாயில்களிலும், பஸ்கள் வெளியேயும், உள்ளேயும் தாறுமாறாக செல்கின்றன.இதனால் எதிரும், புதிருமாக வாகனங்கள் முட்டிமோதிக் கொள்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்டுக்குள் நேற்று முன்தினம் நடந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியானார்.எனவே தாறுமாறாக செல்லும் பஸ்களை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து பஸ்கள் நுழைந்து, வெளியேறும் பகுதிகளை முறைப்படுத்த, பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.