உழவரை தேடி வேளாண் துறை திட்டம் மாதம் இருமுறை நடக்கும் என அறிவிப்பு
ஈரோடு :'உழவரை தேடி வேளாண் துறை திட்டத்தை' முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சியில் நேற்று துவக்கி வைத்தார். கதிரம்பட்டி பஞ்.,ல் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் விழா நடந்தது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, 25 பயனாளிகளுக்கு, 11.78 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கினார்.மாவட்டத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகளை சந்தித்து, வேளாண் துறை, அது சார்ந்த துறைகளை ஒருங்கிணைத்து நலத்திட்டம், தொழில் நுட்பங்களை விளக்க இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேளாண் உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர் தலைமையில் இரு குழு அமைத்து தலா, 15 நாட்கள் இடைவெளியில் ஒவ்வொரு மாதமும், 2 மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில் குறிப்பிட்ட கிராமங்களில் முகாம் நடத்தவுள்ளனர்.இதில் வேளாண்மை, கூட்டுறவு, கால்நடை, வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள், மீன் வளத்துறை என அனைத்து துறைகளின் வட்டார அளவிலான அலுவலர்கள், விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் வழங்குவர்.