பியூட்டீஷியன் கொலை: காதலனுக்கு சிறை
கோபி: கோபி அருகே பியூட்டீஷியனை கொலை செய்து புதைத்த காதலனை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே கெட்டிச்செவியூர் வாழை தோட்டத்தில், ரத்தத்துடன் கூடிய கத்தி கிடப்பதாக, சிறுவலுார் போலீசாருக்கு அக்., 31ல் புகார் சென்றது. அங்கு, நிர்வாண நிலையில் குழி தோண்டி புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை மீட்டு, சிறுவலுார் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், சாந்தி பாளையம் வி.ஏ.ஓ.,விடம், கெட்டிச்செவியூரை சேர்ந்த விவசாயி மோகன்குமார், 29, நேற்று காலை சரணடைந்தார். போலீசார் கூறியதாவது: வாழை தோட்டத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டவர் அந்தியூரை சேர்ந்த சோனியா, 35. இவரது கணவர் இறந்து விட்டார். ஒரு மகன், மகள் உள்ளனர். இரு மாதமாக ஈரோடு அருகே திண்டலில் பியூட்டி பார்லரில் பியூட்டீஷியனாக பணிபுரிந்தார். திருமணமாகி மனைவியை பிரிந்த மோகன்குமார், கோபியில் ஒரு கார்மென்ட்ஸ் கம்பெனியில் பணிபுரிந்தபோது, சோனியாவுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. சம்பவத்தன்று கெட்டிச்செவியூர் வாழை தோட்டத்தில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சோனியா வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த மோகன்குமார், சோனியாவை கல்லால் தலையில் தாக்கி, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அங்கேயே குழி தோண்டி உடலை புதைத்துள்ளார். மோகன்குமாரை கைது செய்து, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்துள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர்.