ஈரோடு: திம்பம் மலை பாதையில் இரவு நேர பயணம், அதிக பாரம் மற்றும் அதிக உயரம் கொண்ட லாரிகள் செல்ல தடை உள்ளதால், பர்கூர் வழியாக இவ்வாகனங்கள் செல்கின்றன. கனரக வாகனங்களால் சாலை சேதமடைந்து வருகிறது.ஈரோடு மாவட்டம் திம்பம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை, தமிழக - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான பிரதான சாலையாகும். இச்சாலை மலைப்பகுதியில் அமைந்துள்ளதாலும், குறுகிய கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்தது என்பதால் வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றன. அதிக பாரம், அதிக உயரமான பாரம், நீளமான லாரிகள் பயணிக்கும்போது வளைவுகளில் திரும்ப முடியாமல், கவிழ்ந்து விடுவதும், சாலைகளை பழுதாக்கியும் விடுகின்றன.தவிர வன விலங்குகள் கடக்கும்போது, இத்தகைய வாகனங்களால் முறையாக நிறுத்தி, ஒதுங்கி, இரவில் செல்வது சிரமமாகி, விலங்குகள் இறக்கின்றன.இதனால், திம்பம் சாலையில் இரவில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. 12 சக்கரங்கள், அதற்கு மேல் சக்கரங்கள் உள்ள லாரிகள் செல்ல முழுமையாக தடை நீடிக்கிறது. இரவு நேர பயணம் மற்றும் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால், பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடகா மாநிலத்துக்கு வாகனங்கள் செல்வது அதிகரித்துள்ளது.குறிப்பாக கிரானைட் கற்கள் பாரம் ஏற்றி செல்லும் லாரிகள், பர்கூர் வழியாக செல்வதால், சாலைகள் கடுமையாக சேதமடைகின்றன. பிற வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல சிரமப்படுகின்றன. எனவே, இங்கும் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுபற்றி பழங்குடி மக்கள் நலச்சங்க நிர்வாகி வி.பி.குணசேகரன் கூறியதாவது: திம்பம் வழியாக இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல தடை உள்ளது. இதனால், பர்கூர் வழியாக கர்நாடகா மாநிலத்துக்கு வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. இங்கு கட்டுப்பாடுகள் இல்லை. அனுமதிக்கப்பட்ட எடையைவிட கூடுதல் எடையுடன் லாரிகள் செல்வதால், சாலைகள் ஆங்காங்கு சேதமடைந்துள்ளன.சில இடங்களில் ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்டு, சாலை சீரமைக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அதிக பாரம் கொண்ட வாகனங்கள் பயணிப்பதால் மீண்டும் சாலை சேதமடையும் அபாயம் தொடர்கிறது. உயரமான, அதிக எடை கொண்ட வாகனங்கள் செல்லாத வகையில் தடைகள், கம்பி தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.