விதி மீறி வணிக வளாகம் கட்டலாமா? நகராட்சி கமிஷனரை முற்றுகை
விதி மீறி வணிக வளாகம் கட்டலாமா?நகராட்சி கமிஷனரை முற்றுகைபுன்செய்புளியம்பட்டி, நவ. 26-புன்செய்புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தை ஒட்டியுள்ள மந்தை புறம்போக்கு நிலத்தில் சட்ட விரோதமாக வணிக வளாக கட்டடம் கட்டும் பணியை கைவிட வேண்டும். மழை நீர் ஓடையின் குறுக்கே ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சேகரிப்பு நிலைய கட்டுமானங்களை இடித்து அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர் கடந்த, 16ம் தேதி புளியம்பட்டியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் மந்தைவெளி புறம்போக்கில், விதிகளை மீறி தொடர்ந்து கட்டுமான பணி நடப்பதாகவும், முறையான அனுமதி பெறும் வரை பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் கூறி, அ.தி.மு.க., - காங்., தே.மு.தி.க., - பா.ஜ., நாம் தமிழர் கட்சி, எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட அனைத்து கட்சியினர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் என, 60க்கும் மேற்பட்டோர், நகராட்சி அலுவலகத்தை நேற்றிரவு முற்றுகையிட்டனர். நகராட்சி கமிஷனர் அறைக்கு சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.''கட்டுமான பணி தொடர்பாக உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உங்கள் கோரிக்கை குறித்து நகராட்சி மண்டல இயக்குனருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும்,'' என்று, நகராட்சி கமிஷனர் கருணாம்பாள் கூறியதால், அனைவரும் கலைந்து சென்றனர்.