| ADDED : ஜன 28, 2024 10:30 AM
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச திருத்தேர் நிலையடைந்தது. முக்கிய விழாவான மகாதரிசனம் செவ்வாய்கிழமை இரவு நடக்கிறது.கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய முருகன் தலமாக திகழும் சென்னிமலையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் தைப்பூச விழா தான் மிக சிறப்பாக கொண்டாடப்படும். 15 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் கரூர், திருப்பூர், கோவை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக காவடி, பால், தயிர் சுமந்து, சென்னிமலை நகரை வலம் வந்து சென்னிமலை மலை மீது படிவழி சென்று முருகனுக்கு அபிேஷகம் செய்து வணங்கி செல்வர்.இந்த ஆண்டு தைப்பூச விழா கடந்த ஜன.,18 ல் தொடங்கியது அன்று முதல் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி சென்னிமலை நகரில் நான்கு ரத வீதிகளையும் திருத்தேர் வலம் வந்து நேற்று மாலை நிலை தேர்ந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரிவேட்டை குதிரை வாகன காட்சி நடக்கிறது. திங்கள் இரவு தெப்போற்சவம் பூதவாகனக்காட்சி நடக்கிறது.மகாதரிசனமான செவ்வாய்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமதே முத்துகுமாரசாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து இரவு 7:40 மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிரமணிய ஸ்வாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா காட்சி இரவு முழுவதும் நடக்கும். இதை காண சென்னிமலை நகரில் லட்சக்கனக்காண பக்தர்கள் கூடுவர் புதன்கிழமை அதிகாலை 5:00 மணிவரை ஸ்வாமி திருவீதி நடக்கும். புதன் கிழமை இரவு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.