எதிர்ப்பை மீறி ஸ்டாண்டில் வாகனத்தை நிறுத்துவதாக உரிமையாளர் மீது புகார்
ஈரோடு, ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க பொது செயலாளர் கனகராஜ் தலைமையிலான ஆட்டோ டிரைவர்கள், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம் நேற்று அளித்த மனு:ஈரோடு மாநகர் பூந்துறை சாலை அண்ணமார் பெட்ரோல் பங்க் எதிரே வாய்க்காலை ஒட்டிய பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஒன்பது பேர் மினி லாரி (டெம்போ) வைத்து தொழில் செய்கின்றனர். இவர்களால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லை.கடந்த ஜூலையில் அசோக்குமார் என்பவர் சிறிய ரக சரக்கு வாகனத்தை (சிறிய நான்கு சக்கர வாகனம்) எங்கள் ஸ்டாண்டில் கொண்டு வந்து நிறுத்தினார். இங்கு நிறுத்த கூடாது. எங்கள் தொழில் பாதிக்கும். சிறிது துாரம் தள்ளி நிறுத்துங்கள் என கூறினோம். நான் இதே பகுதியை சேர்ந்தவன். இங்கு தான் நிறுத்துவேன் என்று கூறி மறுத்து விட்டார்.இப்பிரச்னை குறித்து தாலுகா இன்ஸ்பெக்டர் விசாரித்தார். ஆனாலும் இதுவரை தீர்வு ஏற்படவில்லை. அசோக்குமார் தொடர்ந்து எங்கள் ஸ்டாண்டிலேயே வாகனத்தை நிறுத்துகிறார். இவ்விவகாரத்தில் உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.