பவானிசாகர் அருகே சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
ஈரோடு, பவானிசாகர் அருகே சிப்காட் அமைந்தால் விவசாயம், நீர் நிலைகள், அணை, சுற்றுச்சூழல் பாதிக்கும். எனவே திட்டத்தை கைவிட வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் சுப்பு தலைமையிலான விவசாயிகள் மனு அனுப்பினர்.மனு விபரம்: ஆசியாவின் மிகப்பெரிய மண் அணை பவானிசாகர். இந்த அணை மூலம், ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில், 2.50 லட்சம் ஏக்கருக்கு மேல் நேரடியாக பாசனம் பெறுகின்றன. மாவட்டத்தின் நீராதாரமான பவானி நதி, பவானி அணை, மேற்கு தொடர்ச்சி மலை, அதன் அடிவார உயிர் சூழலுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணை அருகே சிப்காட் தொழில் பூங்கா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அங்குள்ள, சுங்ககாரன்பாளையம் கிராமத்தில், 80 ஏக்கர், பனையம்பள்ளி, 304 ஏக்கர், குரும்பபாளையம், 694 ஏக்கர் என, 1,080 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்து அரசு முயல்கிறது. சிப்காட் திட்டத்தால் பழமையான பவானி நதி, விளைநிலங்கள், நீர், இயற்கை மாசுபட்டு அழியும்.மேற்கு மண்டலத்தில் ஆலை கழிவால் உயிரற்று போன நொய்யல் நதியும், பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட கிராமங்கள், குளம் உள்ளிட்ட நீர் நிலைகளைப்போல் இங்கும் ஏற்படும். தொழிற்சாலைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. நதி நீர், வேளாண் நிலங்கள், இயற்கை, பல்லுயிர் மண்டலம் பாதிக்கும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவ்விடத்தில் சிப்காட் அமையும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.