உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு தடைதமிழக கள் இயக்கம் கண்டனம்

சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு தடைதமிழக கள் இயக்கம் கண்டனம்

ஈரோடு: 'மத்திய அரசு சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு விதித்திருக்கும் தடை விவசாய விரோதப்போக்கு' என, தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.இதுபற்றி, அவர் விடுத்துள்ள அறிக்கை: உலக அளவில் பயன்படுத்தப்படும் உணவு பண்டம் வெங்காயம். பொதுவாக வெங்காயத்தில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் என்று இரண்டு ரகங்கள் உண்டு. சிறிய வெங்காயம் தமிழகத்தில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது. அதன் பயன்பாடு தமிழகத்திலும், தமிழர்கள் வாழும் பிற நாடுகளிலும் உள்ளது. பொதுவாக பெரிய வெங்காயமே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. விலையில் அடிக்கடி ஏற்றம், இறக்கம் காணப்படும். கிலோ ஐந்து ரூபாய்க்கும் விற்கும். 50 ரூபாய்க்கும் விற்கும். அதிக நாட்கள் இருப்பு வைத்து விற்க முடியாத பண்டம். அழுகிப் போகக்கூடியது.வெங்காய ஏற்றுமதிக்கு தற்போது மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது விவசாய விரோதப்போக்கு. அதனால், ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர், மலேசியா, குவைத் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாக இருந்த சின்ன வெங்காயம் திருச்சி விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கிறது. உள்நாட்டில் தற்போது வெங்காய விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் மட்டுமே விளையும் சின்ன வெங்காயத்துக்கு தடை என்பது கூடாது. இந்த தடையால் தமிழக விவசாயிகள், வெளிநாடு வாழ் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.தாராபுரம், பல்லடம், பொங்கலூர், குண்டடம் ஆகிய இடங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சின்ன வெங்காயம் விரைவில் அழுகிப் போகும் அபாயம் உள்ளது. மத்திய அரசு வெங்காயத்துக்கான ஏற்றுமதி தடையை உடனடியாக நீக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ