உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் துவங்கி விட்டது. ஈரோடு மாநகராட்சியில் ஐந்தாண்டுகளாக பதவியில் இருந்தவர்கள் 2006ல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினரா? தங்களை தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு நல்லாட்சி தந்தனரா? உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கப் போகும் மக்கள் பிரச்னைகள் என்ன? என்பதை அலசி ஆராயும் பகுதி இது. ஈரோடு மாநகராட்சி அறிமுகம்: கடந்த 1871ல் ஈரோடு நகராட்சி உதயமானது. ஈ.வெ.ரா., உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை தலைவர்களாக கொண்டிருந்த இந்நகராட்சியின் 100ம் ஆண்டு நிறைவு விழா 1973ல் கொண்டாடப்பட்டது. 2008ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 60 வார்டுகளுடன் இந்த உள்ளாட்சித் தேர்தலில் களம் காண்கிறது.
எல்லை: மாநகராட்சியுடன் அதை ஒட்டியிருந்த வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, காசிபாளையம், பெரியசேமூர் ஆகிய நகராட்சிகள், சூரியம்பாளையம், பி.பி.அக்ரஹாரம் ஆகிய டவுன் பஞ்சாயத்துக்கள், கங்காபுரம், வில்லரசம்பட்டி, திண்டல், எல்லப்பாளையம், முத்தம்பாளையம் ஆகிய பஞ்சாயத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளன. 1.90 லட்சமாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, 3.15 லட்சமாக உயர்ந்துள்ளது.
கட்சிகள் ஆதிக்கம்: ஈரோடு நகராட்சி தலைவர் பதவி, காங்கிரஸ், தி.மு.க., ஆகிய கட்சிகள் தங்கள் வசம் வைத்துள்ளன. 1986 முதல் 2006 வரை நடந்த நான்கு உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்ந்து தி.மு.க.,வே நகராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றியது. தற்போதைய மாநகராட்சியில் மேயராக தி.மு.க.,வை சேர்ந்த குமார் முருகேஷ் உள்ளார். தி.மு.க., கவுன்சிலர்கள் 23 பேர் (மேயர் உள்பட), எட்டு அ.தி.மு.க., ஏழு காங்கிரஸ், இரண்டு ம.தி.மு.க., நான்கு சுயேச்சை, ஒரு தே.மு.தி.க., கவுன்சிலர்கள் உள்ளனர். 2006ல் அ.தி.மு.க., சார்பில் வெற்றிபெற்ற 12பேரில், நான்கு பேர் தி.மு.க.,வுக்கு தாவிவிட்டனர். உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, எதிரொலிக்கப்போகும் பிரச்னைகள் குறித்து அரசியல் கட்சியினர், தொழில் துறையினர், பொதுமக்கள் கூறியதாவது:
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சிவநேசன்: கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது, பதவியைப் பிடிக்க உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மாநகராட்சிக்கு மேட்டூர் அல்லது ஊராட்சிக் கோட்டை பகுதியிலிருந்து சுத்தமான குடிநீர் கொண்டு வர, பலமுறை சர்வே செய்து, ஆய்வறிக்கை சமர்ப்பித்தும், இன்று வரை திட்டம் நிறைவேறவில்லை.
புறநகர் பஸ் ஸ்டாண்டு, லக்காபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், எம்.ஜி.ஆர்., சிலை அருகே மேம்பாலம், அவசியமில்லாமல் பி.எஸ்.பார்க் பகுதியில் 'எல்' வடிவ மேம்பாலம் அமைக்கப்படுமென அறிவித்து, கிடப்பில் விடப்பட்டது, அபிராமி தியேட்டர், கலைமகள் பள்ளி, எஸ்.பி., அலுவலகம், ஆசிரியர் காலனி ஆகிய இடங்களில் நடைபாதை மேம்பாலம் ஆகிய பணிகள் நிறைவேறவில்லை.