| ADDED : செப் 27, 2011 12:16 AM
ஈரோடு: உள்ளாட்சித் தேர்தலில் மனுத்தாக்கல் செய்ய வேட்பாளருடன் முன்மொழிபவர் உள்பட நான்கு பேர் மட்டுமே வர அனுமதிக்க வேண்டுமென, அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் நடக்கிறது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தற்போது மனுத்தாக்கல் நடந்து வருகிறது. செப்டம்பர் 25ம் தேதியிட்ட கடிதம் ஒன்றை மாநில தேர்தல் கமிஷன் சார்பில், அரசு செயலாளர் சேவியர் கிறிசோ நாயகம், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: நன்னடத்தை விதியை செயல்படுத்தும் விதமாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், அலுவலக பணிக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்கவும், வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வதை முறைப்படுத்துவது அவசியம். எனவே, மனுத்தாக்கல் செய்ய வரும் போது வேட்பாளருடன், அவரை முன்மொழிபவர் மற்றும் மூன்று பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.