உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி தூக்கிட்டு தற்கொலை; கணவனுக்கு 7 ஆண்டு சிறை

மனைவி தூக்கிட்டு தற்கொலை; கணவனுக்கு 7 ஆண்டு சிறை

ஈரோடு: ஆபாச படம் எடுக்க முயன்றதால், மனமுடைந்த மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவனுக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஈரோடு, கருங்கல்பாளையம், சின்ன மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (33); ஈரோட்டில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்தில் வழிகாட்டியாக பணிபுரிகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (19). வெங்கடேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து, மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். 2008 ஜூலை 27ல், மது அருந்தியபடி வீட்டுக்கு வந்த வெங்கடேஷ், மனைவியை வீடியோ கேமராவால் ஆபாச படம் எடுக்க முயற்சித்தார்.

அதை தடுக்க முயன்ற கலைச்செல்வி, வீடியோ கேமராவை தட்டி விட்டார். அதில், கேமரா உடைந்து சேதமானது. ஆத்திரமடைந்த வெங்கடேஷ், மனைவியை சரமாரியாக அடித்து துன்புறுத்தினார். கலைச்செல்வி நடந்த சம்பவத்தை தனது தந்தை மாதேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார். அவர், வெங்கடேஷை சந்தித்து புத்திமதி கூறி சமாதானப்படுத்தி சென்றார்.

மனமுடைந்த கலைச்செல்வி, அடுத்த நாள் மாலையில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். கருங்கல்பாளையம் போலீஸார் விசாரித்து, மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக, வெங்கடேஷை கைது செய்தனர். இந்த வழக்கு, ஈரோடு முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரவீந்திரன் விசாரித்து, குற்றம்சாட்டப்பட்ட வெங்கடேஷூக்கு ஏழாண்டு சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். வழக்கில் போலீஸ் தரப்பில், அரசு வக்கீல் மதுபாலா ஆஜராகி வாதிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ