தோணிமடுவு திட்டத்தை அந்தியூர் வரை விரிவுபடுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
ஈரோடு: ஈரோடு மாவட்ட உழவர் விவாதக்குழு தலைவர் சி.எம்.நஞ்சப்பன், செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி ஆகியோர், திருப்பூர் எம்.பி., சுப்பராயன், அந்தியூர் எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோரிடம் வழங்-கிய மனுவில் கூறியதாவது:பாசனம், குடிநீருக்கு சிரமப்படும் காலங்களை உணர்ந்து, மேட்டூர் அணை உபரி நீரை வறண்ட ஏரி, பிற வடிநில பகுதிக்கும், மேட்டூர் அணையின் கிழக்கு பகுதிக்கும் திருப்ப தமிழக அரசின் முயற்சி பாராட்டுக்குரி-யது. தோணிமடுவு திட்டத்தை மேட்டூர் அணை நீர்மட்டம், 110 அடிக்கு மேல் உயரும்போதும், உபரி நீர் வெளியேற்றும் காலங்களிலும், அணையின் வலது பகுதியில் குழாய் மூலம் திருப்பி விடலாம். இதன் மூலம் எண்ணமங்கலம், அந்தியூர் ஏரியில் இருந்து சந்திப்பாளையம், கெட்டிசமுத்திரம், பிரம்மதேசம், ஆப்பக்கூடல் ஏரிக்கு சென்று, உபரி நீரை பவானி ஆற்றுக்கு கொண்டு செல்லலாம். அங்கிருந்து உபரி நீர் காவிரியில் கலக்கும். இதனால் வறண்ட பகுதியான அந்தியூர் பகுதி ஏரிகளுக்கு உபரி நீரை வழங்கினால், அப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயரும். குடிநீராதாரம் பெருகும். 15,000 ஏக்கருக்கு மேல் பாசனம் பெறும். எனவே மேட்டூர் உபரி நீரை தோணிமடுவு திட்டம் மூலமும், அந்தியூர் பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டைகளை நிரப்ப தோணிமடுவு திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.