உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தீ விபத்து
ஈரோடு, ஈரோட்டில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஏ.சி. மிஷினில் தீப்பிடித்ததால், முகாம் பாதியில் நிறுத்தப்பட்டது.ஈரோடு, சூரம்பட்டி வலசு அணைகட்டு சாலையில் பிருந்தாவன் மஹால் உள்ளது. இது ஏ.சி. வசதி கொண்டது. இங்கு, மாநகராட்சி மூன்றாம் மண்டலம் சார்பில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று காலை 9:30 மணிக்கு துவங்கியது. மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக விண்ணப்ப படிவங்களை கொடுக்க, டோக்கன் வாங்கிய பெண்கள் பலர் நின்றிருந்தனர். பலர் விண்ணப்பம் வாங்கி, பூர்த்தி செய்வது குறித்து சந்தேகங்களை கேட்க, 300க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.இந்நிலையில், 11:35 மணியளவில் ஏ.சி. மிஷின் வென்டிலேட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மனு கொடுக்க வந்தவர்கள், இதை பார்த்து பயந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். முகாமில் இருந்த ஊழியர்கள், விண்ணப்ப படிவம், டோக்கன் உள்ளிட்டவற்றை அங்கேயே போட்டு விட்டு வெளியேறினர். மஹாலில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.ஈரோடு மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் கலைச்செல்வன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, 10 நிமிடத்தில் தீயை முழுமையாக அணைத்தனர். தீ விபத்தால் முகாம் பாதியில் நிறுத்தப்பட்டது. ஈரோடு ஆர்.டி.ஓ. சிந்துஜா, தாசில்தார் முத்து கிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் அர்பித் ஜெயின் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் மஹாலுக்கு வெளியே முகாம் துவங்கி நடந்தது. பாதுகாப்பு முன் எச்சரிக்கைக்காக, ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டது.மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.