உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூரில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் உற்சாகமாக பங்கேற்ற மாஜி எம்.எல்.ஏ.,க்கள்

அந்தியூரில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் உற்சாகமாக பங்கேற்ற மாஜி எம்.எல்.ஏ.,க்கள்

அந்தியூர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக இருந்த செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், அந்த இடத்துக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில், அண்ணாதுரை பிறந்தநாள் விழா குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் செல்வராஜ் கலந்து கொண்டார்.நிகழ்வில் அவர் பேசியதாவது: அந்தியூர் தொகுதி அ.தி.மு.க., கோட்டை. கடந்த சட்டசபை தேர்தலில் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தோற்றோம். நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். பொது செயலாளர் பழனிச்சாமி, அந்தியூர் தொகுதியில் யாரை நிறுத்தினாலும், பெரிய அளவிலான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பூத் கமிட்டியில், 45 வயதுக்கு மேல் உள்ளவர்களை நியமிக்க கூடாதென்று, பொது செயலாளர் கண்டிப்பாக கூறிவிட்டார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில், அந்தியூரில் முதல் பொதுக்கூட்டம் நடத்த பொது செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி வரும், 15ல் அந்தியூரில் நடக்கும் அண்ணாதுரை பிறந்தநாள் விழா கூட்டத்துக்கு, நகர, ஒன்றிய, கிளை ஆகியவற்றில் உள்ள அனைத்து கட்சி, நிர்வாகி, தொண்டர்களை அழைத்து வாருங்கள்.கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடத்தில் நிலவும் சங்கடங்களை என்னிடத்தில் தனித்தனியாக கூறுங்கள். பொது செயலாளரிடம் எடுத்துச்சொல்லி தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட, அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் அழைத்து ஆலோசனை செய்ய கட்சி உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ரமணீதரன், ராஜாகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ராஜா, செல்வராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் நாராயணன் உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.பங்கேற்ற விசுவாசிகள்செங்கோட்டையன் விசுவாசிகளான அந்தியூர் நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம், மாணவரணி மாவட்ட செயலாளர் குருராஜ் உள்ளிட்ட பலரும், ஒன்றியத்தில் உள்ள சிலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கும் முன், படம் மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதித்து விட்டு, பத்திரிகையாளர்களை வெளியேற்றி விட்டு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து சென்ற செல்வராஜ், பேட்டியும் தர மறுத்து விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை