உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்று மாலை முதல் 48 மணி நேரத்துக்கான வழிமுறைகள்; மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியீடு

இன்று மாலை முதல் 48 மணி நேரத்துக்கான வழிமுறைகள்; மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியீடு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், வரும், 5 காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளதால், இன்று மாலை, 6:00 மணி முதல் அடுத்த, 48 மணி நேரத்துக்கு வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகம் வெளியிட்டுள்ளது.அதில் கூறியதாவது: இன்று மாலை, 6:00 மணி முதல் வேட்பாளர்கள், கட்சியினர் கடைபிடிக்க வேண்டியது: தேர்தல் குறித்த பிரசாரம், கூட்டம் நடத்தக்கூடாது. எந்த வழிமுறையிலும் பரப்புரை கூடாது. குறுஞ்செய்தி, வலைதள பிரசாரம் கூடாது. ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் தவிர, பிரசாரத்துக்கு வந்த நபர்கள் தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபம், சமுதாய கூடங்களில் தங்க வைக்கக்கூடாது. தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்களிலும் வெளிநபர் இல்லாததை உறுதி செய்ய வேண்டும்.வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிகள், இன்று மாலை, 6:00 மணியுடன் முடிவுக்கு வரும். வாக்காளர்களை வாகனங்களில் ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வருதல் தண்டனைக்குரிய குற்றம். தேர்தல் நாளில் வேட்பாளர்கள் பூத் அமைக்க வழிகாட்டுதல்: ஓட்டுச்சாவடி வளாகத்தில் இருந்து, 200 மீட்டருக்கு அப்பால் தற்காலிக பூத் அமைக்கலாம். ஒரு வேட்பாளருக்கு ஒரு பூத் மட்டும் அமைக்கலாம். வானிலை பாதிப்பில் இருந்து பாதுகாக்க, 10க்கு 10 அடிக்கு மிகாமல் ஒரு குடை அல்லது சிறிய கூடாரத்துக்கு ஒரு மேஜை, 2 நாற்காலிகளுடன் தேர்தல் பூத் அமைக்கலாம். அங்கு, 2 பேர் மட்டும் பணிபுரியலாம். பூத் அமைக்க தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். பொது சொத்து, தனியார் இடங்களில் ஆக்கிரமித்து பூத் அமைக்கக்கூடாது. மதத்தலம், மதத்தல வளாகம், கல்வி நிறுவனத்தில் அமைக்கக்கூடாது. அங்கு ஒரு கொடி, சின்னம், புகைப்படத்துடன் கூடிய ஒரு பதாகை மட்டும் பயன்படுத்தலாம்.பூத் செலவு கணக்கு, வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைய விதிப்படி, 'பூத் சிலிப்' வழங்கலாம். பூத்தில் கூட்டம் கூடக்கூடாது. ஏற்கனவே ஓட்டுப்போட்டவர்களுக்கு அனுமதி இல்லை.தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள், தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் தவிர மற்றவர்கள், ஓட்டுச்சாவடியின், 100 மீட்டர் சுற்றளவில் மொபைல் போன், ஒயர்லெஸ் பெட்டி எடுத்து செல்ல, பயன்படுத்த அனுமதி இல்லை. பூத்தில் வேட்பாளரால் நியமிக்கப்பட்டவர், அதே பூத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். குற்றவியல் பின்னணி உள்ள நபர்களை நியமிக்கக்கூடாது.* வேட்பாளர்கள், அனுமதி பெற்ற வாகனத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும். வேட்பாளர் சொந்த உபயோகத்துக்கு, முதன்மை முகவர் பயன்பாட்டுக்கு, பணியாளர் பயன்பாட்டுக்கு என தலா ஒரு வாகனம் மட்டும் பயன்படுத்தலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை