உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் மேலாண்மை முறை

தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் மேலாண்மை முறை

ஈரோடு:தென்னையில் மகசூல் இழப்பு ஏற்படுத்தும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை ஒட்டுப்பொறிகள், ஒட்டுண்ணி மேலாண்மை முறையில் கட்டுப்படுத்தலாம்.இதுபற்றி ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் மரகதமணி வெளியிட்ட அறிக்கை:ஈரோடு மாவட்டத்தில் தென்னை, 17,500 ெஹக்டேரில் சாகுபடி செய்துள்ளனர். சமீபமாக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மூலம், தென்னை பெரும் சேதத்தை சந்திக்கிறது. தென்னை ஓலைகளின் அடிப்பக்கத்தில் தென்னையை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை பெண் ஈக்கள் மஞ்சள் நிற நீள் வட்ட முட்டைகளை இடுகிறது. அதிலிருந்து வெளிப்படும் நகரும் தன்மை கொண்ட இளம் புழுக்கள், இலைகளின் சாற்றை உறிஞ்சி வளர்கின்றன. இதனால் இலையின் பச்சை நிறம் மாறி, மகசூல் இழப்பு ஏற்படுகிறது.வெள்ளை ஈக்கள் வெளியேற்ற கூடிய எச்சப்பொருட்கள், இனிப்பு சக்தியுடன் உள்ளதால், அந்த இலைகளில் எறும்பு நடமாட்டம் காணப்படும். இதனால் இலைகளில் கரும்பூசன படல நோய் ஏற்பட்டு பச்சை நிற இலை, கருப்பு நிறமாகும்.இப்பூச்சிகள் குறிப்பாக வாழை, தக்காளி, வெண்டை, கத்தரி போன்ற காய்கறிகளையும் தாக்கும். இதை கட்டுப்படுத்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மை உடைய மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் உருவாக்கப்படும் ஒட்டுப்பொறிகள் ஒரு அடி நீளம், ஒரு அடி அகலத்துக்கு ஒரு ஏக்கருக்கு, 10 என்ற எண்ணிக்கையில், 6 அடி உயரத்தில் ஆங்காங்கே தொங்க விட வேண்டும்.ரசாயன பூச்சி கொல்லி மருந்துகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். வெள்ளை ஈக்களை உண்ணும் திறன் கொண்ட ஒட்டுண்ணி என்கார்சியா குவாடலுாபே ஒரு ஏக்கருக்கு, 100 என்ற எண்ணிக்கையில் விட வேண்டும். இந்த ஒட்டுண்ணி தவிர, பல்வேறு இரை விழுங்கிகள் வெள்ளை ஈக்களை உண்ணும்.இதில் கிரைசோபா எனும் பச்சை இறகு பூச்சியை வைத்தும் கட்டுப்படுத்தலாம். இதில் காணப்படும் கரும்பூசணத்தை நிவர்த்தி செய்ய மைதா மாவு கரைசலை ஒரு லிட்டர் நீருக்கு, 25 கிராம் என கலந்து ஓலைகளின் மேல் தெளித்து பெண் ஈக்களை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ