ஈரோடு மாநகராட்சியுடன் 4 பஞ்.,கள் இணைப்பு புதிய நகராட்சியான பெருந்துறை, கவுந்தப்பாடி
ஈரோடு, ஜன. 2-ஈரோடு மாநகராட்சியுடன், 4 பஞ்.,கள் இணைக்கப்படுவதுடன், பெருந்துறை, கவுந்தப்பாடி ஆகியவை புதிய நகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் நேற்று உள்ளாட்சி அமைப்புகள் விரிவாக்கம், புதிய நகராட்சி, டவுன் பஞ்.,கள் குறித்த அறிவிப்பு அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மாநகராட்சியுடன் ஈரோடு யூனியனில் உள்ள கதிரம்பட்டி, மேட்டுநாசுவம்பாளையம் ஆகிய பஞ்சாயத்துக்களும், மொடக்குறிச்சி யூனியனில் உள்ள 46புதுார், லக்காபுரம் ஆகிய பஞ்.,களும் இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.பெருந்துறை டவுன் பஞ்சாயத்து, பெருந்துறை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கவுந்தப்பாடி பஞ்சாயத்துடன் சலங்கப்பாளையம் மற்றும் பி.மேட்டுப்பாளையம் டவுன் பஞ்.,கள் இணைக்கப்பட்டு, புதிய நகராட்சியாக கவுந்தப்பாடி தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் பவானி, கோபி, சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டியுடன், பெருந்துறை, கவுந்தப்பாடி என, 6 நகராட்சியாகிறது.பவானி நகராட்சியுடன் குருப்பநாயக்கன்பாளையம் பஞ்சாயத்தும், கோபி நகராட்சியுடன் வெள்ளாளபாளையம், மொடச்சூர், குள்ளம்பாளையம் ஆகிய பஞ்.,களும், புன்செய் புளியம்பட்டி நகராட்சியுடன் நல்லுார், நொச்சிகுட்டை ஆகிய பஞ்.,களும் இணைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்படுகிறது. சென்னிமலை யூனியனில் உள்ள முகாசிபிடாரியூர் பஞ்சாயத்து, புதிய டவுன் பஞ்சாயத்தாக தரம் உயர்த்தப்படுகிறது. அம்மாபேட்டை யூனியனில் உள்ள படவல்கால்வாய் பஞ்சாயத்து, அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்துடனும், டி.என்.பாளையம் யூனியனில் உள்ள அக்கரைகொடிவேரி பஞ்சாயத்து, பெரியகொடிவேரி டவுன் பஞ்சாயத்துடனும் இணைக்கப்படுகிறது.