உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூர் குருநாத சுவாமி தேரோட்டம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

அந்தியூர் குருநாத சுவாமி தேரோட்டம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

அந்தியூர், அந்தியூர் புதுப்பாளையத்தில், நேற்று நடந்த குருநாத சுவாமி கோவில் தேரோட்டத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அந்தியூர் புதுப்பாளையத்தில், பிரசித்தி பெற்ற குருநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா, கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து கொடியேற்றம், முதல் வன பூஜை நடந்தது. இந்நிலையில், முக்கிய நிகழ்வான ஆடிப் பெருந்தேரோட்டம் நேற்று நடந்தது. புதுப்பாளையம் மடப்பள்ளியிலிருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமிகள் எழுந்தருளினர். காலை, 11:00 மணிக்கு, சப்பரத் தேரில் காமாட்சியம்மன் முன்னே செல்ல, 60 அடி மகமேறு தேரில், பெருமாள் மற்றும் குருநாதரை பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர். வழி நெடுகிலும் பக்தர்கள் காத்திருந்து, சுவாமிகளுக்கு மாலை சூடி வழிபட்டனர். 3 கி.மீ., தொலைவிலுள்ள வனக்கோவிலுக்கு செல்லும் வழியில், மேள தாளங்கள் முழங்கின. தேரோட்டம் துவங்கிய போது, மேவாணி தேசக்குமாரின் இரு குதிரைகள் நடனமாடி வரவேற்றன.மேலும், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் தேருக்கு முன், உற்சாகமாக நடனமாடி சென்றனர். மதியம், 12:30 மணிக்கு வனக் கோவிலுக்கு சென்ற சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நேற்றிரவு விடிய விடிய பூஜை செய்து, இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, புதுப்பாளையம் மடப்பள்ளிக்கு சுவாமிகள் கொண்டு வரப்பட்டது.அந்தியூர், ஈரோடு, கோபி, பெருந்துறை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 17 வரை தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !