குகை வழிப்பாதையில் கழிவுநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதி
கரூர், நவ. 3-பெரிய குளத்துப்பாளையம் குகை வழிப்பாதையில், கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர், ராமகிருஷ்ணாபுரம் வெங்கமேடு, பெரிய குளத்துப்பாளையம் இடையே, கரூர்-ஈரோடு ரயில் வழித்தடம் செல்கிறது. இதில், இரு பகுதி மக்கள் போக்குவரத்துக்காக, சிறிய அளவில் வழிப்பாதை அமைக்கப்பட்டது. இரவு நேரத்தில் அந்த வழியாக பொதுமக்கள் செல்வதை தவிர்த்து, ரயில்வே தண்டவாளம் வழியாக சென்றனர். அப்போது, ரயிலில் அடிபட்டு சிலர் இறந்தனர். இதையடுத்து, பெரியகுளத்துப்பாளையம் ரயில் வழித்தடம் இடையே வாகனங்கள் செல்லும் வகையில், குகை வழிப்பாதை அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.கரூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சரியான வடிகால் வசதி இல்லாததால், குகை வழிப்பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சிறிதளவு மழை பெய்தாலும், அமராவதி கிளை வாய்க்கால் மூலம் வரும் தண்ணீர், குகை வழிப்பாதையில் தேங்கி நின்று விடுகிறது. மேலும் தேங்கிய தண்ணீருடன் கழிவு நீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே, வடிகால் வசதியை மேம்படுத்துவது மட்டுமின்றி, தேங்கிய கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.