நிலுவை வழக்குகளுக்கு தீர்வு வேண்டுமா? சமரச தீர்வு மையத்தை நாட விழிப்புணர்வு
ஈரோடு: ஈரோட்டில் சமரச தீர்வு மைய விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய பேரணியை, முதன்மை மாவட்ட நீதிபதி சமீனா, கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தனர்.மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், சமரச தீர்வு மையம் மூலம் சுமூகமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி சிறப்பு சமரச இயக்கம், 90 நாட்கள் நடக்க உள்ளது. இதில் விவகாரத்து போன்ற திருமண பிரச்னை, குடும்ப வன்முறை, விபத்து இழப்பீடு, காசோலை மோசடி வழக்குகளுக்கு தீர்வு காணப்படும். வரும் ஜூலை, 1 முதல் செப்.,30 வரை 90 நாட்கள் சிறப்பு சமரச செயல் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடந்தது. பேரணியில் சமரச மைய தலைவர் சுகந்தி, முதல் கூடுதல் மாவட்ட நீதிபதி எழில், இரண்டாம் கூடுதல் மாவட்ட நீதிபதி சுரேஷ், மகளிர் நீதிமன்ற நீதிபதி சொர்ண குமார், சிறப்பு மாவட்ட நீதிபதி லீலா, சமரச மைய செயலாளர் ஸ்ரீவித்யா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கிருஷ்ணபிரியா, எஸ்.பி., சுஜாதா உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதேபோல் பவானி உள்பட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.