கீழ்பவானி வாய்க்கால் பாலத்தில் கசிவு சீரமைப்பு பணியில் அதிகாரிகள்
கோபி,கோபி அருகே கீழ்பவானி வாய்க்கால் பாலத்தில், தண்ணீர் கசிந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில், முதல் போக பாசனத்துக்காக, நேற்று முன்தினம், 500 கன தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று, ௧,௦௦௦ கன அடியாக அதிகரிக்கப்பட்டது. வாய்க்கால் வழித்தடத்தில், கோபி அருகே வண்டிபாளையத்தில், குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் கீழ் கட்டமைப்பில், இரண்டு மீட்டர் நீளத்துக்கு பிளவு ஏற்பட்டு, நேற்று மதியம் தண்ணீர் பீய்ச்சியடித்தபடி வெளியேறியது. தகவலறிந்த வண்டிபாளையம் மக்கள் அங்கு குவிந்தனர். நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளும் சென்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'தண்ணீர் வெளியேறும் பகுதியில், கான்கிரீட் போடப்படும். ஆனால் பாசனத்துக்கு திறந்த தண்ணீரில் எந்த தடையும் ஏற்படாது. இப்பணிகள் இரவுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.இதுபற்றி வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில், ''கீழ்பவானி வாய்க்காலில் சிறிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது. அவ்விடம் பழைய கட்டுமானமாகும். அங்கு ஏற்கனவே ஒரு கசிவு இருந்து சரி செய்யப்பட்டது. தற்போது அதன் அருகே மற்றொரு கசிவு ஏற்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, அதிகாரிகள் குழு முடிவு செய்யும்,'' என்றார்.