எங்கள் கட்சிக்காரர்களுக்கும் விருப்பம் இருக்கும்: இடைத்தேர்தல் குறித்து அமைச்சர் சூசகம்
ஈரோடு: ''ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சிக்காரர்களுக்கும் விருப்பம் இருக்கும்,'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்.வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோட்டில் நேற்று கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறுகின்றனர். அங்கு வேறு தீர்மானங்கள்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.தவிர கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேட்டியில் கூட, 'நாங்கள் தோழமை கட்சிகளுடன் சேர்ந்து பேசி முடிவெடுப்போம்' என கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் கூட்டணியை சீராக கொண்டு செல்கிறார். கூட்டணி கட்சியினரும் அவரை முழுமையாக நம்புகின்றனர். இடைத்தேர்தல் தொடர்பாக எங்களது கட்சிக்காரர்களுக்கு விருப்பம் இருக்கும். எங்கள் கருத்தை தலைமையிடம் சொல்வோம். தலைமை என்ன சொல்கிறதோ அதை செயல்படுத்துவோம்.தி.மு.க., 200 தொகுதிகளில் வெல்லும் என முதல்வர் தானாக சொல்லவில்லை. பல்வேறு தரப்புகளில் இருந்து வந்த தகவல், வடநாடுகளில் இருந்து சில அமைப்புகள் சர்வே செய்து தெரிவித்ததன்படி கூறி உள்ளார். கடந்த, 50 ஆண்டு காலம் அரசியலில் அவர் உள்ளதால், அவரும் அதை கணக்கிடுகிறார். இதை வைத்துத்தான், கோவையில் செய்தியாளர்களிடம் முதல்வர் பேசுகையில், 'ஈரோடு சென்று வந்த பின், தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி என்பது மேலும் கூடுதலாகும் என்ற நம்பிக்கை வந்துள்ளது' என கூறி உள்ளார். பழனிசாமி பாராட்டுவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் எதிர்த்து பேசி வந்தால்தான், நாங்கள் இன்னும் உற்சாகமாக பணி செய்வோம். இவ்வாறு முத்துசாமி கூறினார்.