| ADDED : ஜன 08, 2024 12:25 PM
கோபி: கவுந்தப்பாடி அருகே வீட்டுக்குள் மனைவி காயத்துடனும், கணவர் துாக்கிட்ட நிலையிலும் இறந்து கிடந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே அம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன், 55, பெட்ரோல் பங்க் உரிமையாளர்; இவரின் மனைவி கனிமொழி, 46; இவர்களின் மகன் கார்த்திக், 28; அசாம் மாநிலத்தில் விமானப்படையில் பணிபுரிகிறார். இந்நிலையில் தந்தையை நேற்று காலை, 6:00 மணிக்கு கார்த்திக் மொபைல்போனில் தொடர்பு கொண்டார். பல முறை அழைத்தும் எடுக்காததால், அருகேயுள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சென்ற உறவினர்கள் கதவை தட்டினர். வெகு நேரமாகியும் திறக்கப்படாததால், இரும்பு குழாயால் தாழ்ப்பாளை நெம்பி, கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டுக்குள் தலையில் காயங்களுடன் கனிமொழியும், ஈஸ்வரன் துாக்கிட்ட நிலையிலும் சடலமாக கிடந்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தந்தனர். அங்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கனிமொழி உடல் அருகே ஒரு சுத்தியல் கிடந்தது. இதனால் மனைவியை சுத்தியால் தாக்கி கொன்று விட்டு, ஈஸ்வரன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். ஆனாலும், இருவரின் மர்மச்சாவு குறித்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.