உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மாவட்டத்தில் களை கட்டிய காணும் பொங்கல்

ஈரோடு மாவட்டத்தில் களை கட்டிய காணும் பொங்கல்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நேற்று காணும் பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடினர். இதில் ஈரோடு வ.உ.சி. பார்க்கில் பெண்கள் சுதந்திரமாக எவ்வித தயக்கமும் இன்றி ஆடி, பாடி விளையாடி மகிழ்வதற்கு ஆண்டுதோறும் அனுமதி வழங்கப்படும். இதில் சிறுவர்களை (10 வயது கீழ்) தவிர ஆண்களுக்கு அனுமதி கிடையாது.இதேபோல், இந்தாண்டும் வ.உ.சி.பார்க்கில் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. காலை, 11:00 மணி முதல் பெண்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் பூங்காவிற்கு வர தொடங்கினர். கரும்பு, தின்பண்டங்கள், மதிய உணவு உள்ளிட்டவைகளை எடுத்து வந்து, பூங்காவில் ஆங்காங்கே வட்டமாக அமர்ந்து உணவை பகிர்ந்து உண்டனர்.மதியம், 2:00 மணிக்கு மேல் பெண்கள் வருகை அதிகரித்தது. மாலையில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால், பூங்கா முழுவதுமே பெண்களால் நிறைந்து காணப்பட்டது. பூங்காவில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் ஒலிக்கப்பட்ட, சினிமா பாடல்களுக்கு ஏற்ப பெண்கள் நடனமாடி மகிழ்ந்தனர். ஒரு சிலர் கோலாட்டம், குத்தாட்டம் போட்டு அசத்தினர்.இதுதவிர கபடி, ஒருவரை ஒருவர் விரட்டி பிடித்தும், நொண்டியடித்தும் விளையாடி மகிழ்ச்சியடைந்தனர். ஈரோடு, பவானி, சித்தோடு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.* காணும் பொங்கல் விழாவை கொண்டாட டூவீலரில் வந்த பெண்களுக்கு வ.உ.சி. பூங்கா முன்புறம் ஈரோடு வடக்கு போலீசார், போக்குவரத்து விதிமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.* கொடுமுடி, காவிரி ஆற்றங்கரைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வந்தனர். காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்தும், கடற்கரை போல அமைந்துள்ள மணலில் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். சிறுவர்கள் விளையாடி பொழுதை கழித்தனர். கொடுமுடி பேரூராட்சி சார்பில் மணல்மேடு பகுதி சுத்தம் செய்யப்பட்டு, விளக்குகள் அமைத்து தரப்பட்டன.* காணும் பொங்கலையொட்டி, கடம்பூர் செல்லும் வழியில் மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள மல்லியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. சத்தியமங்கலம், வடக்குபேட்டை, கடம்பூர், அத்தியூர், கரளியம், காடகநல்லி, கானக்குந்துார், குன்றி, மாக்கம்பாளையம், கோட்டமாளம், திங்களூர், சுஜ்ஜில்கரை, பவளக்குட்டை, மல்லியம்மன்துர்கம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் வந்து மல்லியம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை