உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ராமன் எத்தனை ராமனடி...நல்லவர் வணங்கும் தேவனடி: பாலராமர் சிலை பிராண பிரதிஷ்டை; ஈரோட்டில் கோலாகலம்

ராமன் எத்தனை ராமனடி...நல்லவர் வணங்கும் தேவனடி: பாலராமர் சிலை பிராண பிரதிஷ்டை; ஈரோட்டில் கோலாகலம்

அயோத்தியில் ராமர் கோவிலில், பால ராமர் சிலை நேற்று, பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதை ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பக்தர்கள், பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.ஈரோடு...ஈரோட்டில் எம்.எஸ்.சாலை வசந்தா என்டர்பிரைஸ் பெட்ரோல் பங்க் உரிமையாளர் சத்தீஷ் கிருஷ்ணா, பங்க்கிற்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு இனிப்புடன், அயோத்தி ராமர் படமும் வழங்கினார். ஈரோடு மாவட்ட விஸ்வகர்மா சங்கம் சார்பில், மதியம் முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.ஈரோடு, ரங்கம்பாளையம், அன்னை சத்யா நகர் ராமர் கோவிலில், இந்து முன்னணி சார்பில் சிறப்பு பூஜை, அபிஷேகம், ராம நாமம் ஜெபித்தல், அன்னதானம் நடந்தது.ரங்கம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் பா.ஜ., மாவட்ட துணை தலைவர் குணசேகரன் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. வீரப்பன்சத்திரம் 16 அடி ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலில் இந்து முன்னணி மாவட்ட செயலளர் ரமேஷ் ஏற்பாட்டில் அபிஷேகம், அன்னதானம் நடந்தது.மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி, சி.கே., மருத்துவமனையில் ராமர் படம் வைத்து வழிபாடு நடத்தினார். பின் பணியாளர்கள், நோயாளிகள், மக்கள் கும்பாபிஷேகத்தை பார்க்க வசதியாக பெரிய திரை வைத்து நிகழ்ச்சியை ஒளிபரப்ப செய்தார். பின் கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து, ராம நாமத்தை ஜெபித்தார்.தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். ஈரோடு, பெரியார் நகர், மாணிக்க விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ., சரஸ்வதி பங்கேற்றார். அவருடன் ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ., பார்வையாளர் வக்கீல் பழனிச்சாமி, மகளிரணி மாவட்ட தலைவி புனிதம், மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பெருந்துறை...பெருந்துறை நகரில் பணிக்கம்பாளையம் கருப்பராயன் கோவில், மருத நகர் சித்தி விநாயகர் கோவில், பாண்டியன் வீதி விநாயகர் கோவில், ஈரோடு ரோடு விநாயகர் கோவில், ராம் நகர் விநாயகர் கோவில், கருமாண்டிசெல்லிபாளையம் விநாயகர் கோவில், தோப்புபாளையம் மாரியம்மன் கோவில், சின்னமடத்துபாளையம் விநாயகர் கோவில், பெத்தாம்பாளையம் ரோடு சித்தி விநாயகர் கோவில், தோப்புபாளையம், வி.சி.வி நகர் விநாயகர் கோவில். மடத்துபாளையம் மாரியம்மன் கோவில் உட்பட்ட, 20க்கும் மேற்பட்ட கோயில்களில் பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பா.ஜ, பொது செயலாளர் ராயல் சரவணன், பெருந்துறை நகர தலைவர் பூர்ண சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.சென்னிமலை...சென்னிமலை அருகே மேலப்பாளையம், ஆதி நாராயண பொருமாள் கோவிலில், சிறப்பு அபிேஷகம், வழிபாடு நடந்தது. இதில் பா,ஜ., முன்னாள் மண்டல தலைவர் ஞானவேல் தலைமையில் மக்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில், முகாசிபிடாரியூர் கருக்குப்பாளையம் பழனி ஆண்டவர் கோவில், வெள்ளோட்டை அடுத்த தண்ணீர்பந்தல் சுயம்பு கிருஷ்ண பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் பா.ஜ., நிர்வாகிகள், மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.பவானிசாகர்...பவானிசாகர் அருகே அண்ணாநகரில், தென் சீரடி சக்தி சாய்ராம் தர்மஸ்தலா கோவிலில், அயோத்தியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித மண்ணுக்கு, சிறப்பு பூஜை செய்து, சுவாமிக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.இதை தொடர்ந்து ராமர், சீதை உற்சவர் சிலைகளை வைத்து, தீபங்கள் ஏற்றி, ஸ்ரீராம பக்த சபா சார்பில் பஜனை பாடல்கள் பாடப்பட்டன. இதை தொடர்ந்து அகண்ட நாம பாராயணம் நடந்தது. உட்பிரகார மண்டபத்தில் அயோத்தி ராமர் கோவில் நிகழ்வு எல்.இ.டி., திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !